

புதுடெல்லி,
காஷ்மீர் முழுவதும் கடுமையான கெடுபிடிகளை அமல்படுத்திவிட்டு சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னர் தெருவில் ஒரு சடலம் கூட இல்லை; இயல்பு நிலையே நிலவுகிறது என்று கூறினால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என ஸ்ரீநகர் மேயர் ஜூனைத் ஆசிம் மட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரின் மேயர்களுக்கு இணை அமைச்சருக்கு நிகரான அதிகாரம் வழங்கி மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஸ்ரீநகர் மேயர் ஜூனத் ஆசிம் மட்டு மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மிக முக்கியமான முடிவை எடுத்த பின்னர் அங்குள்ள மக்கள் இயல்பாக நடமாட முடியாத வகையில் பல்வேறு கெடுபிடிகளை மத்திய அரசு விதித்துள்ளது. மக்கள் வெளியே வர இயலாத அளவுக்கு கெடுபிடிகளைவிதித்துவிட்டு இயல்பு நிலை நிலவுகிறது, ஒரு சடலம் கூட வீதியில் விழவில்லை என்றெல்லாம் கூறினால் அதனை எப்படி ஏற்பது.
இத்தனை ஆண்டு காலம் இங்குள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் தீவிரவாத அச்சுறுத்தல்களையும் தாண்டி இயங்கியுள்ளனர். ஆனால் இன்று அவர்கள் அனைவரும் காவலில் உள்ளனர்.
நிலைமை படிப்படியாக சீராகும் எனக் கூறப்பட்டாலும்கூட மக்கள் தங்களின் நெருங்கிய உறவுகளுடன் தொடர்பு கொள்ள இயலாமல் தவித்து வருகின்றனர். நாங்கள் ஆண்டாண்டு காலமாகவே அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதையே காரணம் கூறி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது என்பது எங்களை தனிமைப்படுத்துகிறது" என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.