Published : 03 Sep 2019 09:56 AM
Last Updated : 03 Sep 2019 09:56 AM

நிலவா? குண்டும் குழியுமான பெங்களூரு சாலையா? - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பெங்களூரு

விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் நடந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. இவர் சமூகப் பிரச்சினைகளைத் தன்னுடைய ஓவியங்களின் மூலம் தொடர்ந்து பிரதிபலித்து வருபவர்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 1) அன்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர் நிலவின் குண்டும் குழியுமான நிலத்தில் நடந்து சென்றார். திடீரென கார்கள் அவரைக் கடந்து சென்றன. பின்புதான் பார்வையாளர்களுக்குப் புரிந்தது, அது நிலவு அல்ல பெங்களூருவின் மோசமான சாலைகள் என்று.

எந்தவித செயற்கை வெளிச்சங்களும் இல்லாமல் வெறும் செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பாதல் நஞ்சுண்டசாமி பேசும்போது, “டிராஃபிக் குறைவாக இருக்கும் என்பதால் இந்த வீடியோவை இரவு 10 மணிக்கு எடுக்கத் திட்டமிட்டோம். அந்த வீடியோவில் விண்வெளி வீரர் போல உடையணிந்து நடப்பவர் பிரபல திரைப்பட நடிகர் பூர்ணசந்திரா மைசூரூ. இந்த வீடியோவை எடுக்க எனக்கு ரூ. 8000 செலவானது. பெங்களூருவில் சாலை பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. அவற்றைச் சரி செய்யும் பணியும் மிகவும் மெதுவாக நடக்கிறது. கடந்த சில முறை வேகமாக செய்ததைப் போல இந்த முறையும் செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இதே போல கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு சாலையில் இருந்த ஒரு மிகப்பெரிய பள்ளத்தில் பெரிய முதலை ஒன்று இருப்பதைப் போல ஒரு தத்ரூபமான 3D ஓவியத்தை வரைந்து அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார் பாதல் நஞ்சுண்டசாமி. அதன் பிறகு சில நாட்களிலேயே அந்தப் பள்ளம் மூடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x