ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: 'இரும்பு கரம் கொண்டு வழக்கை நடத்துவது அவசியம்': சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான முன்ஜாமீன் தீர்ப்பு 5-ம் தேதி அறிவிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் : கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் : கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி,

சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி சைனி கூறுகையில், " இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க சிபிஐயும், அமலாக்கத் துறையும் மீண்டும் மீண்டும் கோருவது இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக இதே நடைமுறையை சிபிஐயும், அமலாக்கத் துறையும் கடைப்பிடித்து வருகின்றன. மனுதாரர்களின் முன்ஜாமீன் குறித்து செப்டம்பர் 3-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை அவர்களைக் கைது செய்யத் தடை விதிக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி ஓ.பி. சைனி முன் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, அமலாக்கப்பிரிவு தரப்பு, ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இருவரும் தீவிரமான பொருளாதார குற்றங்களைச் செய்துள்ளார்கள் தேசநலனுக்கும், மக்களின் நலனுக்கும் எதிராகச் சதி செய்துள்ளார்கள் என்று சிபிஐ, அமலாக்கப்பிரிவு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சிபிஐ தரப்பு கூறுகையில், " ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் அளித்தால் ஆதாரங்களை அழித்துவிடுவார்கள். விசாரணைக்கும் இருவரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இரும்புக் கரம் கொண்டு சிதம்பரம் வழக்கை விசாரிக்க வேண்டும், வழக்கில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கப்பிரிவு தரப்பில் கூறுகையில், " சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் செய்துள்ளார்கள், ஏராளமான போலி நிறுவனங்கள் தொடங்கி, குற்றங்கள் செய்துள்ளார்கள். இருவரும் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதால் இருவரையும் கைது செய்யலாம்." எனத் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி. சைனி,, இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் இருவரும் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in