

புதுடெல்லி
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார மந்தநிலையை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, இன்னமும் தேசத்தின் பொருளாதாரத்தை அரசியலாகவே பார்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பெரும்பாலும் சரிவைச் சந்தித்துள்ளது.
முதல் காலாண்டில் குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.
இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார். அப்போது நிருபர்கள் பொருளாதார மந்தநிலை குறித்து நிர்மலாவிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் கூறுகையில், "ஒவ்வொரு துறையின் தேவைக்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசத்தின் பொருளாதாரத்தில் ஒவ்வொரு துறையும் எங்களை அணுகும்போது அவர்களின் தேவை அறிந்து அதற்கு ஏற்றார்போல் அரசு செயல்படும்" எனத் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பதில் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை இருப்பதை மத்திய அரசும், நிதியமைச்சரும் ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது இல்லையா? நாட்டின் பொருளாதார நிலையில் நிதியமைச்சர் அதிகமாக அரசியல் செய்வதில் என்ன தேவை இருக்கிறது? மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும்.
இதை உணரத் தயாராக இல்லாவிட்டால், இவர்கள் உருவாக்கிய இந்த மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க எப்படி திட்டமிடப் போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடிஐ