Published : 01 Sep 2019 04:48 PM
Last Updated : 01 Sep 2019 04:48 PM

காஷ்மீர் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சை நினைத்து காங்கிரஸார் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா தாக்கு

சில்வாஸா,

ஜம்மு காஷ்மீர் குறித்த ராகுல் காந்தியின் பேச்சை நினைத்து காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காட்டமாகப் பேசினார்.

தாதர் மற்றும் நகர் ஹாவேலியில் உள்ள சில்வாஸா நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா சென்றார்.

அங்கு ரூ.61 கோடியில் கல்வி நிறுவனங்கள் அமைக்கவும், ரூ.8 கோடியில் பாராமெடிக்கல் நிறுவனமும், ரூ.10 கோடியில் மருத்துவமனையும் கட்ட அடிக்கல் நாட்டினார்.

மேலும், தொண்டுநிறுவனம் சார்பில் 280 பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தையும் அமித் ஷா தொடங்கிவைத்தார். அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370-வது பிரிவை பிரதமர் மோடி அரசு நீக்கியதை மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ராகுல் காந்தி என்ன பேசினாலும் அதை பாகிஸ்தான் புகழ்கிறது. ஐ.நா.வில் அளித்த கடிதத்தில் கூட பாகிஸ்தான் ராகுல் காந்தியின் பேச்சைக் குறிப்பிட்டுள்ளது இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

370 பிரிவு நீக்கப்பட்ட நாளில் இருந்து, ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது இதுவரை ஒரு துப்பாக்கி குண்டு, கண்ணீர் புகை குண்டுகூட பாயவில்லை. ஆனால் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகிறார்கள். உலகத்துக்கும், நாட்டுக்கும் சொல்கிறேன். காஷ்மீர் முழுமையும் அமைதியாக இருக்கிறது. இப்போதுவரை அங்கு ஒருவர் கூட பலியாகவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது பிரிவை நீக்கியபின்புதான், அங்கு வளர்ச்சிக்கு வழி ஏற்பட்டு, தீவிரவாதம் சவப்பெட்டியில் அடைக்கப்பட்டு கடைசி ஆணி அடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்துவிட்டது.

பாஜக மற்றும் பாரதிய ஜன சங்கம் இருந்தபோது, தேசிய நலன் சார்ந்த எந்தவிஷயங்களாக இருந்தாலும், அது பாகிஸ்தானுடன், சீனாவுடன் போர், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின ஒருங்கிணைந்த பகுதி என்ற கோரிக்கையாக இருந்தாலும் அதை ஆதரித்தார்கள்.

இதுநாட்டின் பாரம்பரியமாக இருந்தது. தேசிய நலன் என்று வரும்போது, கட்சிக் கொள்கைகளைக் கடந்து நாட்டுக்காக குரல் கொடுப்பார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த பாரம்பரியத்தை உடைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிக்காகச் செயல்படுவதை மக்கள் புரிந்து கொண்டனர். ஆனால், அது அவர்களுக்குப் புரியவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது பிரிவை திரும்பப் பெற்ற துணிச்சலான முடிவை பிரதமர் மோடியைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது. கடந்த 70 ஆண்டுகளில் பலர் நாட்டின் தலைவர்களாக வந்துள்ளனர். 3 தலைமுறைகளாக ஆண்டுள்ளனர். ஆனால், 370 பிரிவை நீக்க முடியவில்லை. இந்த விஷயத்துக்காக பிரதமர் மோடியை மக்கள் ஆசிர்வதிக்கிறார்கள்''.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x