Published : 01 Sep 2019 04:39 PM
Last Updated : 01 Sep 2019 04:39 PM

ஹெலிகாப்டரில் பறக்கும் மனைவியின் ஆசை: பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாளில் நிறைவேற்றிய பள்ளி ஆசிரியர்

ஜெய்ப்பூர்,

ஹெலிகாப்டரைப் பார்த்ததும் அதில் பறக்க வேண்டும் என்று நினைத்த மனைவியின் ஆசையை தனது ஓய்வுபெற்ற நாளில் நிறைவேற்றி மகிழ்ச்சியை அளித்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர்.

அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரமேஷ் சந்த் மீனா நேற்று (சனிக்கிழமை) தனது ஓய்வுபெறும் நாளை மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடினார். அவர் இதுநாள்வரை ஆசிரியராகப் பணியாற்றிய சாராய் உயர்நிலைப் பள்ளியிலிருந்து விடைபெறும் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமல்ல, ஊரே கூடி விடை தந்த நிகழ்ச்சியாக அது அமைந்தது.

22 மைல் தொலைவில் உள்ள மாலாவாலி கிராமத்திற்குப் புறப்படுவதற்காக சாராய் கிராமத்தில் அமைந்த மலையடிவார ஹெலிபேட் மைதானத்திற்கு வந்தார் ரமேஷ் சந்த். வந்தவர் சாதாரணமாக வரவில்லை, ராஜபுத்திரர்களின் பாரம்பரிய உடையில் தோன்றிய அவர், சன்கிளாஸ் ஒன்றையும் அணிந்துகொண்டு மனைவி சோமாட்டியுடன் பேரன் அஜயையும் அழைத்துக்கொண்டு வந்தார். மக்கள் அன்போடும் மகிழ்ச்சியோடும் கையசைத்து ஆரவாரித்து விடை தர மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் ஏறி அங்கிருந்து தனது சொந்த கிராமத்திற்குப் பறந்து சென்றார்.

இச்சம்பவம் குறித்து பிடிஐயிடம் ரமேஷ் சந்த் மீனா கூறுகையில், ''முதன்முதலாக ஹெலிகாப்டரைப் பார்த்தபோது என் மனைவி, ''இதில் நாம் பறக்க வேண்டுமெனில் எவ்வளவு செலவாகும்'' என்று கேட்டார். அப்போது சரி இதை ஓய்வு பெறும் நாளிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று தோன்றியது.

இதற்காக புதுடெல்லியிலிருந்து ரூ.3.70 லட்சத்திற்கு ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தேன். வான்வழிப் பயணம் 18 நிமிடங்கள் நீடித்தது. எனது 34 ஆண்டு ஆசிரியர் பணி சேவையிலிருந்து விடைபெறும்போது ஹெலிகாப்டரில் வீட்டுக்குப் பறந்து வந்தது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.

இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளக்கூட நமக்கு நிறைய அரசு நடைமுறைகள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் நான் பெற்றுள்ளேன். ஹெலிகாப்டர் பயண ஆசையை எளிதாக்கிய மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு நன்றி''

இவ்வாறு நேற்று ஓய்வுபெற்ற ஆசிரியர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.

தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் ஆசிரியர், மற்றவர் இந்திய உணவுக் கழகத்தில் ஆய்வாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x