

புதுடெல்லி,
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு முஸ்லிம்களைக் காட்டிலும், முஸ்லிம்கள் அல்லாதவர்கள்தான் அதிகமாக உளவு சொல்கிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சர்ச்சையாகப் பேசியுள்ளார்.
இதற்கு பாஜகவின் தேசியத் துணைத் தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கண்டனம் தெரிவித்து, பதிலடி அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் சட்னா மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு நிதி சேர்த்ததாக கடந்த புதன்கிழமை 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் பல்ராம் சிங். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், பாரதிய ஜனதா யுவ மோர்சா அமைப்பின் தலைவர் துருவ் சக்சேனாவும் இதேபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இப்போது பல்ராம் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளது மத்தியப் பிரதேசத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் அளித்த பேட்டியில் கூறுகையில், " பஜ்ரங் தளம், பாஜக ஆகிய கட்சிகள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பணம் பெறுகின்றன. இதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் அல்லாதவர்கள்தான் ஐஎஸ்ஐக்கு உளவு சொல்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜக தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், " திக்விஜய் சிங் தான் செய்தியில் இடம் பெறவேண்டும் என்பதற்காகவே சர்ச்சையாகப் பேசுகிறார். திக்விஜய் சிங்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.ராகுல் காந்தி பேசியதைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.வில் கடிதம் அளிக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை பொறுத்தமட்டில் உலகிற்கே, இந்த தேசத்துக்கே அவர்களின் தேசப்பற்று என்னவென்று நன்கு தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.
பஜ்ரங் தளம் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சோஹன் சோலங்கி நிருபர்களிடம் கூறுகையில், " திக்விஜய் சிங்கின் பேச்சுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். அவரின் பேச்சுக்கு எதிராக நாங்கள் அவதூறு வழக்கு தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த மேஜர் சுரேந்திர பூனியா கூறுகையில், "ஐஎஸ்ஐ அமைப்பில் இருந்து பாஜக பணம் பெற்றதற்கு திக்விஜய் சிங்கிடம் ஆதாரம் இருக்கிறதா, இந்தியாவின் கலாச்சாரத்துக்கு திக்விஜய் சிங் போன்ற வகுப்புவாதங்களைப் பரப்பிவிடும் தலைவர்கள்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல். உங்களைப் பார்த்து வெட்கமாக இருக்கிறது" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் இன்று ட்விட்டரில் தான் பாஜக குறித்துப் பேசவில்லை என்று கூறி மறுத்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " மத்தியப் பிரதேச போலீஸார் பஜ்ரங் தளம், பாஜகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சிலர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றுதான் கூறினேன். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பாஜக பணம் பெற்றதாகக் கூறவில்லை. நான் கூறியதில் தெளிவாக இருக்கிறேன். ஆனால், தொலைக்காட்சி சேனல்களில் இதில் பாஜகவை இழுக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
, ஐஏஎன்எஸ்