Published : 31 Aug 2019 08:02 PM
Last Updated : 31 Aug 2019 08:02 PM

2015 முதலே பொருளாதார சரிவு தொடங்கி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆகக் குறைந்து 6 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளதையடுத்து பல பொருளாதார நிபுணர்களும் விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில் இப்போதே துரிதமாகச் செயல்பட்டு புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கவில்லையெனில் பெரிய சரிவையே சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

புதிய பொருளாதாரக் கொள்கை எதுவும் வரவில்லை எனும்போது 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கு பிரியாவிடை கொடுத்து விடத் தயாராகுங்கள். தைரியம் மட்டுமே அல்லது அறிவு மட்டுமே பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்டு விடாது, இரண்டுமே தேவை, ஆனால் இன்று நம்மிடம் இரண்டுமே இல்லை.

என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இவரது ட்வீட்டை முன் வைத்து ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்று சுப்பிரமணியன் சுவாமியிடம் பேட்டி கண்ட போது அவர் கூறியதாவது:

இப்போது எரியும் இந்தப் பிரச்சினை செய்தித்தாள்களில் கட்டுரையாக வருகிறது, நாட்டின் பல்வேறு பேச்சுகளிலும் இது பேசப்பட்டு வருகிறது, ஆனால் எனக்கு இது புதிதல்ல. நான் கூறிவருவது என்னவெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில காலவரம்புகளை நிர்ணயித்தது. அதனை நாம் விரவச்செய்ய முடியவில்லை. திரு.ஜேட்லி இதனை செய்ய முடியவில்லை காரணம் அவருக்கு பொருளாதாரம் தெரியாது. அவர் பயிற்சி பெற்ற பொருளாதாரவாதி அல்ல. பிரதமரும் கூட முறைப்படி பொருளாதாரம் கற்றவர் அல்ல.

ஆகவே நான் என்ன கூற வருகிறேன் என்றால் அந்தரத்தில் தொங்குவதன் தொடக்கத்தில் இருக்கிறோம். 2015-ல் இதைத்தான் நான் தி இந்து (ஆங்கிலம்) செய்தித்தாளில் கட்டுரையாக எழுதியிருந்தேன். அதுமுதலே நான் பல எச்சரிக்கைகளை விடுத்தேன் பிரதமருக்கு எழுதினேன் ஆனால் என்ன நடந்தது எனில் 2015 முதலே நம் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இப்போது 5% ஆகக் குறைந்து விட்டது, அதுவும் தற்போதைய விலை நிலவரங்களின் படி 5%, ஆனால் மாறா விலை (Constant prices) நிலவரங்களின் படி 3.5% வளர்ச்சிக்கு மேல் இருக்காது என்றே நினைக்கிறேன். இது உண்மையான வீழ்ச்சியாகும் அதாவது இதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன, வங்கிகளும் சரிவைச் சந்தித்துள்ளன, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலையில் இருக்கின்றன. ஆகவே நாம் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு, அதாவது 5 ஆண்டுகளின் ஜிடிபியை இரட்டிப்பாக்குவது, 2024-ல் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாகும் என்று இலக்கு வைக்கின்றனர். இது ஆண்டுக்கு 14.5% வளர்ச்சி விகிதமாகும். ஆண்டு ஒன்றிற்கு 14.5% வளர்ச்சியில் சென்றால்தான் 5 ட்ரில்லியன்பொருளாதார இலக்கை எட்ட முடியும்.

ஆனால் உங்கள் கணக்கீட்டின் படியே 5% வளர்ச்சியையே தாண்ட முடியவில்லையே? மேலும் வரும் காலமும் ட்ரெண்ட் கீழ்நோக்கிச் செல்கின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறுகளை சரி செய்யாமல் நாம் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளேன் அது விரைவில் வெளிவருகிறது, அதில் சரிவை எப்படி சரி செய்யலாம் என்று தெரிவித்துள்ளேன்.

நான் எவ்வளவோ கூறியும் இந்த அரசு காதில் வாங்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக நான் எது கூறினாலும் அவர்கள் காதில் வாங்கவே இல்லை. ஆகவே உடனடியான தீர்வுகளை நான் ஏன் சொல்ல வேண்டும், என் கருத்துகளை விற்க நான் தயாராக இல்லை. அவர்களுக்கு தேவைப்பட்டால் என்னிடம் ஆலோசிக்கட்டும் நான் அவர்களுக்குட் தெரிவிப்பேன். பொருளாதாரத்தில் ஒரு அளவு கோல் என்பதில்லை. இது பல அளவுகோல்களை ஒருங்கிணைப்பதாகும். ஏனெனில் பெரும்பொருளாதாரம் என்பது பொதுச்சமனமாக்க ஒழுங்கமைப்பு. நான் சில விஷயங்களைக் கூறினேன் உதாரணமாக வருமானவரியை ரத்து செய்தல், வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றேன். பிக்ஸட் டெபாசிட்டுக்கு 9% ஆக வட்டியை அதிகரிக்கவும் என்றும் ஆலோசனை தெரிவித்தேன். ஆனால் இவையெல்லாம் அவர்கள் காதில் விழவில்லையே.

எனவே 2015 முதலே நான் கூறிவருவது என்னவெனில் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும் என்பதே. 2015க்கு முன்னரே இதற்கான தீர்வை நோக்கி தொடங்கியிருக்க வேண்டும். வெறுமனே வங்கிகளை இணைப்பது மூலம் இதனைச் சரி செய்து விட முடியாது, ஏனெனில் இதுவும் வேலையின்மையைத்தான் உருவாக்கும். ஆட்சியதிகார விவகாரங்கள் மூலம் இதனை சரி செய்து விட முடியுமா? ஆகவே இது பொருளாதாரம் பற்றிய புரிதலின்மையை பறைசாற்றுகிறது. ஆகவே நான் கூறுவதெல்லாம் அந்தரங்கத்தில் தொங்கும் நிலை கீழே விழுவதில்தான் முடியும்.

இவ்வாறு கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x