Published : 31 Aug 2019 06:22 PM
Last Updated : 31 Aug 2019 06:22 PM

கொடுமைப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டினார் சசிதரூர்: சுனந்தா வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதம்

சசி தரூர் எம்.பி.

புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது மனைவி சுனந்தாவைக் கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியுள்ளார் என்றும் அவர் மீது தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகளை விதிக்குமாறும் சிறப்பு நீதிமன்றத்திடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று இரவு, முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நகரில் ஒரு சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இக் கொலைச் சம்பவம் தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ (கணவர் அல்லது அவரது உறவினர் ஒரு பெண்ணை கொடுமைக்கு உட்படுத்தியது) மற்றும் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் சசி தரூர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சுனந்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி தரூர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு பின் இவ்வழக்கில் சசி தரூர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் டெல்லி அமர்வு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் பாட்டியாலா நீதிமன்றம் அவரை ரூ.2 லட்சம் பிணைவைப்புத் தொகை செலுத்துமாறு உத்தரவிட்டு அவரை வெளிநாடு செல்லவும் அனுமதித்தது.

2019 ஜூனில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக சசி தரூர் மீண்டும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைகள் முழுமையாக முடிவடையாத நிலையில் இவ்வழக்கின் வாதங்களே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, உளவியல் ரீதியான சித்திரவதைக்குத் தள்ளப்பட்ட நிலையிலும் திருமணத்திற்கு வெளியே ஒரு உறவு இருந்ததாலும் புஷ்கர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிறப்பு சிபிஐ நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் காவல்துறை கூறியது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டு வாதாடிய அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா, சசி தரூருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு அழுத்தம் கொடுத்து வாதிட்டார்.

நீதிமன்றத்தில் அவர் கூறியதாவது:

''மின்னஞ்சலில், சுனந்தா புஷ்கர் அனுப்பியிருந்த செய்தியொன்றை நாங்கள் கண்டோம். அதில் தனக்கு இனி வாழ விருப்பமில்லை என்று கூறிய அவர், அவரது மரணத்திற்காக பிரார்த்தனை செய்வதாக அந்த மின்னஞ்சலில் செய்தி அனுப்பியிருந்தார்.

சுனந்தா இறப்பதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக தம்பதியர் இருவரும் கேட்டி என்ற பெண்ணை முன்னிறுத்தி தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) விஷயங்களிலும் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றும் அவரது வீட்டைச் சேர்ந்தவர்கள் விசாரணை வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.

மெஹ்ர் தாரார் என்ற பெண்ணுடன் தரூருக்கு இருந்த உறவு பற்றி புஷ்கர் தன்னிடம் கூறியதாக சுனந்தாவின் நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான நளினி சிங் என்னிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2013, ஜூன் மாதத்தில் துபாய்க்குச் சென்ற சசி தரூரும் மெஹ்ர்தாரரும் அங்கேயே மூன்று இரவுகளைக் கழித்துள்ளனர். துபாயில் அப் பெண்ணுக்கு ஒரு வலுவான தளம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதிலிருந்து அதைப் பற்றி தனது நண்பர்களிடம் அவர் தெரிவத்துள்ளதைப் பற்றியும் சுனந்தா தன்னிடம் தெரிவித்ததைப் பற்றியும் நளினி சிங் கூறியுள்ளார்.

சுனந்தாவிடமிருந்து நளினி சிங்குக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவர் மனமுடைந்து பேசியுள்ளார். அவரது குரலிலேயே வருத்தம் தொனித்தது. தரூரும் மெஹ்ர் தராரும் நெருக்கமாகப் பரிமாறிக்கொண்ட செய்தியை தான் அறிந்துகொள்ள நேர்ந்ததைப் பற்றியும் அவரது பேச்சில் வெளிப்பட்டதாக நளினி சிங் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு தரூர் புஷ்கரை விவாகரத்து செய்யப் போவதாக ஒரு மின்னஞ்சல் செய்தியில் நளினி சிங்குக்கு அனுப்பியுள்ளார்.

சுனந்தாவின் சகோதரர் ஆஷிஸ் தாஸ், தனது சகோதரி மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டதாகவும் அவரது வாழ்க்கையின் கடைசி நாட்களில் வருத்தப்பட்டதாகவும் என்னிடம் கூறினார்.

சுனந்தா புஷ்கரை கொடுமைக்குள்ளாக்கி அவரது கணவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் தற்கொலைக்குத் தூண்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு இந்த வாக்குமூலங்களே சாட்சியாக உள்ளன. எனவே நீதிமன்றம் அவர் மீது உரிய தண்டனைக்குரிய குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டும்''.

இவ்வாறு அரசு வழக்கறிஞர் சிறப்பு நீதிபதி முன்னிலையில் தனது வாதங்களை முன்வைத்தார்.

வழக்கறிஞர்கள் முன்வைத்த கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், சசி தரூருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான வாதங்களை அக்டோபர் 17 வரை நீட்டித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x