

மும்பை,
தேசத்தின் பொருளாதாரமும், வளர்ச்சியும் பாதுகாப்பான, நேர்மையான கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது, நாட்டை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாக சரிந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக மத்திய அரசை விமர்சித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு யார் பொறுப்பேற்பது என்று காட்டமாக கேள்விகளை எழுப்பி வருகிறது.
இந்த சூழலில் மும்பையில் பாஜகவின் போக்குவரத்து தொழிலாளர்களின் சங்கம் திறப்புவிழா இன்று நடந்தது அதில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்றார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:
நம் நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்த்தும் முயற்சியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கு முன், ஊழலை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமான ஜிஎஸ்டி வரி அறிமுகம் போன்ற வரலாற்று சிறப்பு முடிவுகளை மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இதன்மூலம் நிலையான, வலிமையான பொருளாதாரத்தை நிறுவ முயற்சிக்கிறது.
அனைவருக்கும் முழுமையான வளர்ச்சி, சிறுபான்மையினர் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் மதிப்புடன் கூடிய மேம்பாடு ஆகியவற்றை வளங்க மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை சமூகத்தில் இருந்து 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம் மாணவிகள் உள்ளிட்ட 5 கோடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
வரலாற்று மற்றும் துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளையும், மக்களுக்கு எளிதான நிர்வாக முறையையும் கொண்டு மத்திய அரசு தேசத்தை வலிமையாக மாற்ற உறுதிபூண்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவை பாதுகாப்பான, நேர்மையான கரங்களில் இருக்கிறது. நாட்டின் உள்கட்டமைப்புக்கு அதிகமான முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது.
வங்கிமுறையை வலிமையாக்கும் வகையில் தேசிய வங்கிகள் இணைக்கப்பட்டு 12 ஆகக்குறைக்கப்பட்டுள்ளது. ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக மோடி அரசு கடுமையான நடவடிக்கைஎடுத்து வருகிறது. 3 லட்சம் போலி நிறுவனங்களை மத்திய அரசு கண்டுபிடித்து மூடப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அன்னிய நேரடி முதலீடு கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டு அதிக முதலீடுகளை அளிப்பார்கள், இதன் மூலம் முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாகி, பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரும்.
தேசபாதுகாப்புக்கு அரசு அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வலிமையான தேசிய கொள்கை மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370 பிரிவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகள் மேம்பாட்டுக்கு 370 பிரிவை திரும்பப் பெறுவதுதான் சிறந்தது என அறிந்து அதை செய்துள்ளோம்
இவ்வாறு நக்வி தெரிவித்தார்
பிடிஐ