

புதுடெல்லி,
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல்(நாளை) சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வருகிறது என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்குமுன், பிரதமர் மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவுக்கான சர்வீஸ் சார்ஜ் ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் அது நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி குளிர்சாதன வசதி இல்லாத பெட்டியில் பயணிப்போர் டிக்கெட் ஒன்று முன்பதிவுக்கு சர்வீஸ் சார்ஜாக 15 ரூபாயும், ஏ.சி முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3 அடுக்கு ஏசி ஆகிய அனைத்து பிரிவில் டிக்கெட் முன்பதிவுக்கு சர்வீஸ் சார்ஜாக 30 ரூபாயும் வசூலிக்கப்படும்.
ஐஆர்சிடிசி வசூலிக்கும் சர்வீஸ் சார்ஜ் தவிர்த்து, டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரியும் தனியாக டிக்கெட் ஒன்றுக்கு வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தை திரும்பப் பெறும் முன், ஏசி அல்லாத டிக்கெட் ஒன்றுக்கு 20 ரூபாயும், ஏசி டிக்கெட் ஒன்றுக்கு 40 ரூபாயும் சர்வீஸ் சார்ஜ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் ரயில்வே வாரியத்தின் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஐஆர்சிடிசி மீண்டும் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு பயணிகளிடம் இருந்து சர்வீஸ் சார்ஜ் கட்டணத்தை மீண்டும் வசூலிக்க அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆகஸ்ட் 30ம் தேதி ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிவிப்பில் " ஐஆர்சிடிசி தீவிரமாக ஆய்வு செய்ததில் ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவுக்கு மீண்டும் சர்வீஸ் சார்ஜ் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்கு முன் சர்வீஸ்சார்ஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டது என்பது தற்காலிகமான நடைமுறைதான் என்று நிதியமைச்சகமும் தெரிவித்திருந்தது, தேவைப்பட்டால் மீண்டும் வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து இருந்தது. அந்த அடிப்படையில் மீண்டும் சர்வீஸ் சார்ஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவுக்கான சர்வீஸ் சார்ஜ் கட்டணம் நீக்கப்பட்டதில் இருந்து ரயில்வே வருவாய் 26 சதவீதம் குறைந்துவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிடிஐ