

புதுடெல்லி,
நாட்டின் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்ததற்கு சர்வதேச காரணிகள் காரணமல்ல, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம், நிதி அவசரநிலையை ஏற்படுத்திவிட்டார்கள்என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டு அறிக்கை நேற்று வெளியானது. இதில் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்தது. கடந்த 2012-13-ம் ஆண்டின் 4வது காலாண்டில் இருந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்தது, அதாவது ஏறக்குறைய 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.
குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததுள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.
இந்த பொருளாதாரச் சரிவு குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. அந்த கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறுகையில், " மத்திய அரசின் தவறான நிதிமேலாண்மையால், பொருளாதார அவசரநிலை உருவாகி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சூழ்ந்துவிட்டது.
இந்த பேரழிவையும், வேதனையையும்தான பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. நாம் நினைத்த அளவைக் காட்டிலும் இந்த பிரச்சினை பெரிதாக இருக்கிறது. பொருளாதாரம் முழுமையாக சரிந்திருக்கிறது, உற்பத்திதுறை மூடப்பட்டு வருகிறது, ஏற்றுமதி ஊக்கமாக இல்லை, இறக்குமதி அதிகரித்து வருகிறது,
அனைத்து துறைகளிலும் லட்சக்கணக்கில் மக்கள் வேலையிழக்கிறார்கள். கிட்டப்பார்வை உள்ள பாஜக அரசு பொருளாதார கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு பதிலாக மேம்போக்காக இருக்கிறது. இப்படியே இருந்தால் நோயாளி இறந்துவிடுவார் எனத் தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் இருப்பதற்கு சமமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறுகையில், " பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவுக்கு சர்வதேச காரணிகள் காரணமல்ல. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம்.பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசு தங்களுக்கு தேவையான நேரத்தில் நிதியமைச்சர் மூலம் பரபரப்பான செய்திகளை வெளியிடுகிறது. இதனால் பொருளாதாரத்தின் உண்மை நிலையை மறைக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளது
காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில், " பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக பாஜக அரசு வெளியே காட்சிப்படுத்தி வந்தது. ஆனால், இனிமேல் அப்படி கூற முடியாது, ஜிடிபி விவரங்கள் தெளிவாகக் காட்டிவிட்டன.
இந்தியப் பொருளாதாரத்தை ஒற்றைக் கையில் பாஜக அரசு கொலை செய்துள்ளதை ஜிடிபி விவரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தை மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்து காப்பதற்கு பதிலாக, வேலையின்மை, தொழில்துறை மூடல், வரித் தீவிரவாதம் ஆகியவற்றை செலுத்தியுள்ளது.5 லட்சம் கோடிடாலர் பொருளாதாரம் என்ற பிரச்சாரம் செய்கிறார்கள்.
பாஜக மன்னி்ப்பு கோரி, தேசிய அவசரநிலையை அறிவிக்க வேண்டும். பொருளாதாரம், வங்கி முறையின் நம்பகத்தன்மையை மத்திய அரசு அழித்துவிட்டது. கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத பெருமுதலாளிகள் பெயரையும், வராக்கடன் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ