Published : 31 Aug 2019 10:57 AM
Last Updated : 31 Aug 2019 10:57 AM

'பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது': மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் சாடல்

புதுடெல்லி, ஏஎன்ஐ

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு நல்ல காலம் வரும் என்று பெருமையடித்த நிலையில் பொருளாதாரம் காலியாகி, பஞ்சராகிவிட்டது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கடுமையாகச் சாடியுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டு அறிக்கை நேற்று வெளியானது. இதில் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்தது. கடந்த 2012-13-ம் ஆண்டின் 4வது காலாண்டில் இருந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்தது, அதாவது ஏறக்குறைய 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததுள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.

இந்த பொருளாதாரச் சரிவு குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ட்விட்டரில் இந்தியில் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் ட்விட்டரில் இந்தியில் பதிவிட்ட கருத்தில் " நல்லகாலம் பிறக்கும் என்று பாஜக அரசு பெருமையடித்த நிலையில் இப்போது ஜிடிபி புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. பொருளாதார வளர்ச்சியும் இல்லை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் வலிமையாகவில்லை.

பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பதை தெளிவுபடுத்துங்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் #எக்கானமிக் ஸ்லோடவுன், #எக்கானமி க்ரைஸிஸ் என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களிடம் கூறுகையில், " விரைவான பொருளாதார கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவராதவரை, 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டும் என்று இந்தியா உணராது.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் வராவிட்டால், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு குட்பை சொல்லிவிட தயாராக இருங்கள். துணிச்சலும், அறிவும் இல்லாமல் மிகப்பெரிய சரிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்க முடியாது. துணிச்சலும், நல்ல அறிவும் அவசியம். இன்று இரண்டுமே இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x