Published : 31 Aug 2019 10:40 AM
Last Updated : 31 Aug 2019 10:40 AM

தேசிய குடிமக்கள் பதிவேடு ஏன்? எதற்கு? எப்படி? - பின்னணி தகவல்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே விண்ணப்பிக்கவில்லை அவர்களையும் சேர்த்து மொத்தம் 19,06,657 பேர் இறுதிபட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 22 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த முக்கிய தகவல்கள்:

* சுதந்திரத்திற்கு பிறகு வங்கதேசம், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான அளவில் குடியேறியதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

* 1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட பிறகு இந்திய குடிமக்களை கண்டறியவும், அப்போது பாகிஸ்தானின் பகுதியாக இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை கணகெடுக்கவும் தேசிய குடிமக்கள் பதிவேடு அப்போது உருவாக்கப்பட்டது.
* இதன் பிறகு பல்வேறு அரசியல் போராட்டங்கள், வழக்குகளையும் இந்த விவகாரம் சந்தித்தது.

* அசாம் மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும், வெளிநாட்டினர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த தொடங்கப்பட்ட அசாம் கண பரிஷத் கட்சி அசாமில் வென்று ஆட்சி பொறுப்பேற்றது.

* உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது.

* உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் தேசிய குடிமக்கள் பதிவேடு 2013-ம் ஆண்டு உருவாக்கும் பணி தொடங்கியது
* 1951-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றவர்கள் அல்லது 1971-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தியாவில் வசித்து, வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

* இதனால் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள் பலரின் பெயர் விடுபடுவதாக அசாம் மாநில பாஜகவினர் கவலை தெரிவித்தனர்.

* இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்வது என மத்திய அரசு முடிவெடுத்தது.

* இதற்கு அசாம் கணபரிஷத் உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. வெளிநாட்டைச் சேர்ந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

* தேசிய குடிமக்கள் பதிவேடு அடிப்படையில், குடியுரிமை மசோதா, மக்களவையில் ஜனவரி 8-ம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

* வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

* இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

* ஏற்கெனவே இரண்டு முறை தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

* இந்தநிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x