

காஷ்மீர் பிரச்சினை இடம்பெறாவிட்டால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆலோசகரும், அந்நாட்டு வெளியுறவு ஆலோசகருமான சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைச் சந்தித்துப் பேசினார்.
ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "டெல்லியில் இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தரப்பிலான ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்" எனக் கூறப்பட்டது.
இதனால், இருநாடுகளுக்கும் இடையே தடைபட்டுபோன பேச்சுவார்த்தை மீண்டும் துளிர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஷ் வெளியிட்டுள்ள செய்தி பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.
அவர் கூறும்போது, "ரஷ்யாவில், மோடியும், நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசியது இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை குறைக்க உதவும். இருப்பினும், காஷ்மீர் பிரச்சினை இடம்பெறாவிட்டால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை. மும்பை தாக்குதல் விவகாரத்திப் பொருத்தவரை இந்தியா கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும்" என சர்தாஜ் அஜீஷ் கூறியுள்ளார்.