

குவாஹாட்டி
அசாமில் தேசிய குடிமக்கள் பதி வேட்டின் (என்ஆர்சி) இறுதிப் பட்டி யல் இன்று வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி அமைதி காக்குமாறு மக்களை அரசு கேட்டுக்கொண் டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத் தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப் பட்டு வருகிறது.
இதன் வரைவுப் பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடு பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதை யடுத்து விடுபட்டவர்களின் பெயர் களை சேர்ப்பதற்காக பணி மேற் கொள்ளப்பட்டது. இப்பணியை முடித்து, ஆகஸ்ட் 31-ம் தேதி என்ஆர்சி இறுதிப் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதன்பேரில் இன்று இறுதிப் பட்டியல் வெளியிடப் படுகிறது. இதையொட்டி மக்கள் அமைதி காக்க வேண்டும் என அசாம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் சர்வானந்த சோனோவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “என்ஆர்சி இறுதிப் பட்டியலில் ஒருவரது பெயர் இல்லையென்றால், அவர் வெளிநாட்டினர் என்று அர்த்தமல்ல. இது தொடர்பான முடிவை உரிய சட்ட நடைமுறைகளுக்கு பிறகு வெளிநாட்டினர் நடுவர் மன்றம்தான் எடுக்க முடியும். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். பீதி அடைய வேண்டாம். அனைவரின் பாதுகாப்பையும் அரசு கவனத்தில் கொள்ளும். இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க போதிய வாய்ப்புகள் வழங்கப் படும். இதற்கு அனைத்து சட்ட உதவிகளையும் மாநில அரசு செய்யும்” என்று கூறியுள்ளார்.
என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அசாம் அரசு அதிகரித்துள்ளது. வன்முறை அபாயம் உள்ள இடங்களில் பாது காப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மக்கள் ஒன்றுகூடவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.