Published : 30 Aug 2019 08:11 PM
Last Updated : 30 Aug 2019 08:11 PM

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5% ஆகக் குறைவு

நுகர்வோர் தேவைக் குறைவு, தனியார் முதலீடு குறைவு உள்ளிட்ட காரணங்களினால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5% ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மந்தநிலைப் போக்கு ஏற்பட்டுள்ளதாக என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 % ஆக இருந்தது, மேலும் மந்தமடைந்து 5% ஆகக் குறைந்துள்ளது என்று அரசுத் தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

இதே காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2% என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்த நிலை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். நுகர்வோர் தேவை மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் அமைப்புசார்ந்த சீரியசான பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறுகின்றனர்.

இந்தியா ரேட்டிங்ஸின் தலைமை பொருளாதாரவியலாளர் தேவேந்திர பந்த் கூறும்போது, “கட்டமைப்பு மற்றும் சுழற்சி சார்ந்த பொருளாதார விவகாரங்களை அரசு உடனடியாக கவனமேற்கொள்ள வேண்டும். ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவு கட்டுமானம் மற்றும் நுகர்வோர் தேவை மந்தநிலை ஆகியவற்றை அவர் காரணமாகக் கூறுகிறார்.

அக்டோபரில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு 110 அடிப்படை புள்ளிகள் ரிபோ விகிதத்தை ஆர்பிஐ குறைத்துள்ளது.

இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ஆண்டறிக்கையில் வியாழனன்று கூறியதாவது:

கட்டமைப்புரீதியிலான விவகாரங்களான நிலம், உழைப்புச் சக்தி, வேளாண் விற்பனை உத்தி ஆகியவற்றிலும் கவனம் தேவைப்படுகிறது. இது தொடர்பான கூறுபாட்டு பகுப்பாய்வு (The disaggregated analysis) தெரிவிப்பது என்னவெனில், உற்பத்தி, வாணிபம், ஹோட்டல்கள், போக்குவரத்து, கம்யூனிகேஷன் மற்றும் ஒலிபரப்புத் துறை, கட்டுமானம், வேளாண்மை ஆகிய துறைகளில் ஒரு பரந்துபட்ட சுழற்சிரீதியிலான சரிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை கூறுகிறது.

நுகர்வுத் தேவைப்பாட்டை அதிகரித்தல் தனியார் முதலீட்டை அதிகரித்தல் ஆகியவை 2019-20-ல் அதி முன்னுரிமை பெறுகிறது. இதில் வங்கி மற்றும் வங்கியல்லாத துறைகளை வலுப்படுத்துவது முக்கிய அங்கமாக விளங்குகிறது. உள்கட்டமைப்புச் செலவீடுகளை அதிகரித்தல், தொழிலாளர்ச் சட்டங்கள், வரிவிதிப்பு மற்றும் சட்டத்துறைகளில் கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் அதிகம் தேவைப்படுகிறது, என்கிறது அறிக்கை.

இந்த அனைத்து அளவுகோல்களையும் கடைபிடித்து அமலாக்கம் செய்தால் வர்த்தகம் செய்வதை எளிதாக்கினால் 2024-25-ல் 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாகும் தொலைநோக்கை அடைவதற்கு உதவும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் இணைப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏகப்பட்ட கடனில் தத்தளிக்கும் வங்கித்துறையை சீர்த்திருத்தி மீண்டும் கடன் வழங்குதலை அதிகரிக்குமாறு சிலபல சீர்த்திருத்தங்களை அரசு முயற்சி செய்து வருகிறது.

நிலக்கரி துறையில் 100% அன்னிய முதலீடு:

நிலக்கரிச் சுரங்கத் துறையில் 100% அன்னிய முதலீட்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒப்பந்த உற்பத்தித் துறை சிங்கிள் பிராண்ட் சில்லரை விற்பனைத் துறை ஆகிய்வற்றுக்கும் சிலபல சலுகைகளை அறிவித்துள்ளது.

மேலும் வரும் வாரங்களில் பொருளாதாரத்தை முன்னேற்ற பல அறிவிப்புகள் வெளியாகும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆட்டோமொபைல் துறை கடந்த ஆண்டை விட 31% சரிவு கண்டு 20 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்ததில் கடுமையான வேலையிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x