

சியாஹா (மிசோராம்)
ஒரு தொலைதூர கிராமத்தைப் பார்வையிட வந்திருந்த மாவட்ட ஆட்சியரை பல்லக்கில் தூக்கி வலம்வந்து வரவேற்பு அளித்துள்ள சம்பவம் மிசோரம் மாநிலத்தில் இன்று நடந்துள்ளது.
மிசோராமின் சியாஹா மாவட்டத்தில் உள்ள திசோபி பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதி கிராமம் ஒன்றிற்கு அம்மாவட்டத்தின் ஆட்சியர் டி.எம்.பூபேஷ் சவுத்ரிகை வருகைதந்தார். அவரைப் பார்த்த கிராம மக்கள் வந்திருப்பவர் தங்களின் 'ஆட்சியர்' என்றறிந்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மாவட்ட ஆட்சியர் கிராமத்திற்கு வருவதை அறிந்த கிராமத்து மக்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை ஆடியும் பாடியும் வெளிப்படுத்தினர், ஏனெனில் பெரிய பதவியில் உள்ள உயரதிகாரி ஒருவர் கிராமத்திற்கு வருவது இதுவே முதல் முறை.
இதைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் சிலர் மரம் மற்றும் துணிகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பல்லக்கு ஒன்றை உருவாக்கினர். அதில் பூபேஷ் சவுத்ரியை அமரவைத்து அவ்வூர் மக்கள் தங்கள் தோள்களில் பல்லக்கை சுமந்துகொண்டு கிராமத்தின் வழியாக தூக்கிச் சென்று வலம் வந்தனர்.
சமீபத்திய இடைவிடாத மழையால் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிராமத்தின் சாலைகள் சேதமடைந்தன. இதை நேரில் கண்டறியவே மாவட்ட ஆட்சியர் கிராமத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.