Published : 30 Aug 2019 05:07 PM
Last Updated : 30 Aug 2019 05:07 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு செப்.2-ம் தேதிவரை சிபிஐ காவல் நீட்டிப்பு

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை செப்டம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சிபிஐ காவலில் திங்கள்கிழமை வரை இருப்பதாக ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் விருப்பம் தெரிவித்திருந்ததையடுத்து, அவருக்கு 2-ம் தேதிவரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான வகையில் ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது உதவினார் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, கடந்த 21-ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது, முதலில் 5 நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 26-ம் தேதி சிதம்பரத்துக்கான சிபிஐ காவலை 30-ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே சிபிஐ தன்னை கைது செய்தது தவறு என்றும், கைது ஆணையை ரத்து செய்யக் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டி அமலாக்கப்பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பானுமதி, போபண்ணா தலைமையிலான அமர்வில் கடந்த சில நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்கள், அதேபோல அமலாக்கப்பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.


இருதரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில், அமலாக்கப்பிரிவு செப்டம்பர் 5-ம் தேதிவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதிகள் தடைவிதித்தனர். இந்த வழக்கில் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் ப.சிதம்பரத்துக்கான சிபிஐ காவல் இன்று(30-ம்தேதி) முடிகிறது. கடந்த 21-ம் தேதி சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ இதுவரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரித்துள்ளது.இதற்கிடையே ப.சிதம்பரம் தரப்பில் வரும் செப்டம்பர் 2-ம் தேதிவரை சிபிஐ காவலில் இருக்க விரும்பவாதக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த சூழலில் சிபிஐ அதிகாரிகள் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தினார்கள். சிபிஐ தரப்பி்ல ஆஜரான கூடுதல் சொலிசி்ட்டர் ஜெனரல் நடராஜ், செப்டம்பர் 5-ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இன்னும் விசாரணை முழுமையாக முடியவில்லை. விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்க மறுக்கிறார். தெளிவான பதில்களை கூற மறுக்கிறார் என்று தெரிவித்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிபிஐ நீதிபதி அஜய் குமார் குஹர், " ஏன் ப.சிதம்பரத்திடம் விசாரிக்க ஒவ்வொரு முறையும் 5 நாட்களாகக் கேட்கிறீர்கள். மொத்தமாக 15 நாட்கள் விசாரணைக்கு கேட்லாமே. எதற்காக இப்படி கேட்கிறீர்கள், உங்களின் வழக்கு விஷயங்களைப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். செப்டம்பர் 2-ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதற்கு சிபிஐ வழக்கறிஞர் நடராஜ் கூறுகையில்ல, " சிதம்பரம் நேரடியாக பதில் கூற மறுக்கிறார், நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 மணிநேரம் விசாரணை நடத்துகிறோம். ஆதலால் கூடுதலாக 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க வேண்டும். சிபிஐ காவலில் திங்கள்கிழமை வரை இருப்பதால் தனக்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று சிதம்பரம் தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதற்கு சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், சிபிஐ வழக்கறிஞரிடம் கலந்துபேசி, எத்தனை நாள் காவல் தேவை என்பதை அறிந்து கூறுகிறோம் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி அஜய் அதிருப்தி அடைந்து," நீதிமன்றத்தை என்னவென்று நினைத்தீர்கள், நீதிமன்றத்தால் எந்த பயனும் இல்லை என்கிறீர்களா" எனக் கேட்டார்.

அதற்கு சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணன், " கடந்த 55 மணிநேரமாக விசாரணை நடத்தியும், சிதம்பரத்திடம் இருந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து ஒரு ஆவணம் கூட சிபிஐவசம் இல்லை. இ்த விசாரணை நியாயமானதாக இல்லை" எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி அஜய் கவுர், சிபிஐ கேட்டுக்கொண்டபடி ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வழங்க மறுத்து, வரும் செப்டம்பர் 2-ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவி்ட்டார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x