

பிரதமர் மோடியின் 'ஒரு வார்த்தை பல மொழி' சவாலுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. சசிதரூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதனை உடனே ஏற்றுக்கொண்ட அவர் தனது ட்விட்டரில் ப்ளூரலிஸம் என்ற ஆங்கில வார்த்தையைப் பதிவிட்டு அதற்கு இந்தி மற்றும் மலையாள மொழியில் இணையான சொற்களைப் பதிவிட்டார். மேலும், தினமும் குறைந்தது ஒரு வார்த்தையை மூன்று மொழிகளில் பதிவிடுவதாக உறுதி கூறியிருக்கிறார்.
மேலும் பிரதமரின் இந்த முயற்சி இந்தி ஆதிக்கத்திலிருந்து விலகும் செயல் எனப் பாராட்டியுள்ளார்.
முன்னதாக, பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் ஊடகங்களுக்கு ஓர் எளிமையான வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் ஏன் மொழிகளின் சக்தியை ஒருங்கிணைக்கக் கூடாது. இதற்கு ஊடகங்கள் ஒரு பாலமாக செயல்பட வேண்டும். ஊடக பங்களிப்புடன் பல்வேறு மொழிகள் பேசுபவர்களை ஒருங்கிணைக்க முடியும். தினம் ஒரு வார்த்தையை குறைந்தது 10-ல் இருந்து 12 மொழிகளில் பிரசுரித்தால் ஓராண்டில் ஒரு நபர் சுமார் 300 வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள இயலும்.
இவ்வாறாக ஒருவர் மற்ற இந்திய மொழிகளைக் கற்கும்போது இந்திய கலாச்சாரத்தின் பொதுத்தன்மையை அங்கீகரித்து பாராட்ட இயலும்" எனக் கூறியிருந்தார்.
எதிர்ப்புகளை மீறியும் புகழாரம்..
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யும், கேரள காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமானன சசி தரூர், பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியிருந்தார்.
அதற்கு பதில் கடிதம் எழுதிய சசி தரூர்," மக்களின் நம்பிக்கையை நாம் மீண்டும் வெல்ல வேண்டும் என்றால், மோடியிடம் உள்ள ஈர்ப்பை, நாமும் நம் மீது, நம் கட்சியின் மீது ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நமது விமர்சனத்துக்கு இன்னும் நம்பகத்தன்மை ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது மோடியின் ஒரு மொழி பல வார்த்தை சவாலை உடனே ஏற்றுக் கொண்டதோடு தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.