Published : 30 Aug 2019 02:36 PM
Last Updated : 30 Aug 2019 02:36 PM

வன மேம்பாட்டுக்கு ரூ.47 ஆயிரம் கோடி:வேறு திட்டங்களுக்கு  நிதியை பயன்படுத்திவிடாமல் கண்காணிக்க கம்பா ஆணையம்: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி

இழந்த காடுகளை மீட்டெடுக்க வழங்கப்பட்டுள்ள ரூ.47 ஆயிரம் கோடியை மாநிலங்கள் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை கண்காணிக்க மத்திய அரசின் வன மேம்பாட்டு ஆணையமான கம்பாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காட்டுத் தீ, காடழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிந்துவரும் காடுகளை மீட்டெடுக்க ரூ. 47 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற அரசு கூட்டம் ஒன்றில் இதற்கான நிதியை சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகர் இந்த நிதிகளை வழங்கினார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் தொழிற்சாலை கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 14 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, கடந்த 3 வாரங்களில் மட்டும் உலகின் நுரையீரல் எனப்படும் பிரேசிலின் அமேசான் மழைக் காடுகள் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிந்து நாசமடைந்ததால் உலக சுற்றுச்சூழலுக்கே மாசு ஏற்பட்டுள்ளதாக சூழல் அமைப்புகள் கவலை தெரிவித்தன.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்ட மத்திய அரசு உடனடியாக காடுவளர்ப்புத் திட்டத்திற்கான பணிகளை மேம்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் முதல் கட்டமாக தற்போது இந்தியாவில் உள்ள 27 மாநிலங்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு நேற்று வழங்கியுள்ளது.

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிகழ்ச்சியில் இந்த நிதி மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

''மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள நிதி பசுமையை ஈடுசெய்யும் காடு வளர்ப்பு, வனவிலங்கு மேலாண்மை, காட்டுத் தீ தடுப்பு, பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிராமங்களை தானாகவே இடமாற்றம் செய்தல், உயிரியல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மேலாண்மை, வனவியல் ஆராய்ச்சி போன்றவற்றுக்கு இந்த நிதித் தொகுப்பு பயன்படுத்தப்படும்.

மத்திய அரசின் CAMPA ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா,
உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஹரியானா, புரியா , கோவா, மேற்கு வங்கம், மிசோரம், திரிபுரா, மேகாலயா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட 27 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

'கம்பா' ஆணையம்

மத்திய அரசினால் விடுவிக்கப்பட்ட தொகைகள் வனப்பகுதிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக வேறு திட்டங்களுக்காக இந்த நிதியை மாநில அரசுகள் பலமுறை பயன்படுத்தியுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தமுறை இதனைத் தடுக்கவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் CAMPA சட்ட ஆணையத்தின்மூலம் காடுவளர்ப்பு நிதியை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பியுள்ள இந்த தொகைகளை காடு வளர்ப்பு உள்ளிட்ட வன மேம்பாட்டுப் பணிகளுக்கு விரைவாகவும் துல்லியமாகவும் பயன்படுத்துவதை 'கம்பா' அதற்கென்று உள்ள பொருத்தமான திட்டமிடல் மற்றும் கண்காணிப்புகள் வாயிலாக உறுதி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வன சுற்றுச்சூழல் அமைப்பின் மீளுருவாக்கம், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு நிதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு CAMPA(Compensatory Afforestation Fund Management and Planning Authority) இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் ஆகும்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x