

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் வெள்ளிக்கிழமை தொழுகை என்பதால், இன்று காஷ்மீர் நகரம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் மீண்டும், வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு பிரிவுகளாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.
கடந்த 5-ம் தேதியில் இருந்து காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில நிர்வாகம் விதித்துள்ளது. தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் சேவை, நாளேடுகள், ஊடகங்களுக்கு கட்டுப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டதால் மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தனர்.
எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்புநிலைக்கு மக்கள் வருகின்றனர்.
இருப்பினும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபோதிலும் மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. செல்போன், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டநிலையில் லேண்ட் லைன் சேவை மட்டும் இயக்ககப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வழக்கமாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கும், தாக்குதல்களிலும் பிரிவினைக்கு ஆதரவான மக்கள் ஈடுபடுவார்கள். அந்தவகையில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.
காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொடர்ந்து 26-வது நாளாக காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சாலைகளில் வாகனங்கள் செல்லாமலும், கடைகள் அடைக்கப்பட்டும் வெறிச்சோடி காணப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் இன்னும் வீட்டுக் காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிடிஐ