Published : 30 Aug 2019 12:47 PM
Last Updated : 30 Aug 2019 12:47 PM

பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்: ஹைதராபாத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

ஹைதராபாத்

ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் பிளாட்பார இடைவெளிக்குள் கால் இடறிய நிலையில் ரயில் பெட்டிக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் விழ இருந்தவரை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் ஹைதராபாத்தில் நேற்று நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நம்பாலி ரயில்வே நிலையத்தில் நேற்று மாலை ரயில் ஒன்று வந்து நின்றது. பயணிகளை இறக்கிவிட்டு சிறிது நேரத்தில் அந்த ரயில் புறப்படத் தயாரானது.

ரயில் மெல்ல நகரத் தொடங்கியபோது திடீரென பயணி ஒருவர் அவசரஅவசரமாக இறங்கினார். வேகமாக இறங்க முயற்சித்ததால் காலை எங்கே வைக்கிறோம் என்று தெரியாமல் வைக்க, பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் உள்ள இடைவெளிப் பகுதிக்குள் கால் சிக்கிக்கொண்டது.

ரயிலின் வேகத்தில் அவர் பெட்டிக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே உள்ள பிளாட்பார இடைவெளிக்குள் தவறி விழுவதைப் பார்த்த ஒரு ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் வேகமாக ஓடிவந்து அவரைக் காப்பாற்றினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தில் காவலர் சாதூர்யமாகவும், வேகமாகவும் செயல்பட்டிருக்காவிட்டால் பயணி உயிரிழந்திருப்பார். இந்தக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயில் தண்டவாளத்திற்குள் விழ இருந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை காவலரின் துணிச்சல்மிக்க செயலை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x