

மக்களவையில் இன்று (புதன்கிழமை) கடும் அமளிக்கு இடையே வழக்கமான அலுவல் தொடங்கியது. லலித் மோடி விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியும், தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம் கோரி டி.ஆர்.எஸ். கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது. முதல் நாளான நேற்று, மக்களவை கூடியதும் அண்மையில் காலமான ரட்லம் (மத்தியப் பிரதேசம்) தொகுதி பாஜக உறுப்பினர் திலீப் சிங் புஹாரியாவின் மறைவுக்கும் 11 முன்னாள் உறுப்பினர் களின் மறைவுக்கும் அஞ்சலி செலுத் தப்பட்டது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று அவை கூடியது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடு முழுவதும் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளிலும், மணிப்பூரில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் வருத்தம் தெரிவித்தார்.
ஆப்கன், துனிசியா, குவைத், பிரான்ஸ் நாடுகளில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை சுட்டிக்காட்டி, தீவிரவாத அச்சுறுத்தலை எடுத்துரைத்தார். அதன் பின்னர் இச்சம்பங்களில் இறந்தவர்களுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வு முடிந்ததுமே எதிர்க்கட்சியினர் தங்கள் அமளியை தொடங்கினர். லலித் மோடி விவகாரத்தை முன்வைத்த காங்கிரஸ் எம்.பிக்கள் பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டனர். அந்தப் பதாகையில் 'பெரிய மோடி ஆதரவில் சிறிய மோடி வலுவாக இருக்கிறார்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜும் அணிந்து வந்திருந்தனர். இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
அவர்கள் ஒருபுறம் கோஷமிட்டுக் கொண்டிருக்க, மற்றொருபுறம் தெலங்கானா ராஷ்டிரீய கட்சியினர் (டி.ஆர்.எஸ்.) கட்சியினர் தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் மதியம் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை 2 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் எச்சரிக்கை:
இதற்கிடையில், மக்களவை நடவடிக்கைகளை முடக்கும் வகையில் அவை நடுவே வந்து நின்று கூச்சலிடும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரித்துள்ளார்.