3 பீர் ஆர்டர் செய்த பெண்: 87000 ரூபாயை அபேஸ் செய்த ஊழியர்

3 பீர் ஆர்டர் செய்த பெண்: 87000 ரூபாயை அபேஸ் செய்த ஊழியர்
Updated on
1 min read

மும்பை

வங்கி ஊழியர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்யப் போய் ரூ.87,000 ஆயிரத்தை பறி கொடுத்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பை அருகிலுள்ள பொவாய் நகரை சேர்ந்தவர் ராதிகா பரேக். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலை முடிந்து வீடு திரும்பிய இவர் பீர் வாங்க விரும்பி இணையத்தில் தேடியுள்ளார். வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி செய்யும் ஒரு கடை கண்ணில்படவே அந்த கடையின் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து மூன்று பீர்களை ஆர்டர் செய்துள்ளார்.

மறுமுனையில் பேசிய ஊழியர் பீருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்திய பின்புதான் டெலிவரி செய்ய இயலும் என்று கூறியிருக்கிறார். கூகுள் பே செயலி மூலம் இந்த பணத்தை தாங்கள் செலுத்தலாம் என்று கூறிய ஊழியர் ராதிகாவின் யூபிஐ (UPI) எண்ணை கேட்டிருக்கிறார்.

அதை ஊழியரிடம் பகிர்ந்து விட்டு போனை துண்டித்த அவரது எண்ணுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கான அழைப்பு (payment request) வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்றதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு பீருக்காக ரூ. 29,001 எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பீருக்கு 29001 ரூபாயா? என அதிர்ந்து போன ராதிகா மீண்டும் அந்த ஊழியரை தொடர்ந்து கொண்டு கேட்டுள்ளார்.

தவறாக பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார் அந்த ஊழியர். பீருக்கான தொகை ரூ.420 போக மீதி தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு திரும்ப வந்துவிடும் என்று அந்த ஊழியர் உறுதியளிக்கவே போனை துண்டித்திருக்கிறார் ராதிகா. இதற்கிடையே அவரது வங்கிக் கணக்கிலிருந்து மேலும் 58,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் ராதிகா.

மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்த போது ’நாட் ரீச்சபிள்’என்று வந்திருக்கிறது. உடனடியாக இது குறித்து ராதிகா போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். 3 பீருக்கு 87,000 ரூபாயை இழந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பணப்பரிமாற்றங்கள் எளிமையானாலும் இன்னொரு பக்கம் இது போன்ற ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் நம்பகமான நபர்கள், நிறுவனங்களில் மட்டுமே பணப்பறிமாற்றம் செய்யவேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் சில மாதங்களுக்கு முன் இதேப்போன்று 48 ரூபாய் ஐஸ்கிரிமுக்காக 56 ஆயிரம் ரூபாய்வரை இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in