

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடியும், நிலையில் செப்டம்பர் 2-ம் தேதிவரை சிபிஐ காவலில் இருக்க விரும்புவதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று சிபிஐ காவலில் அவரை அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிடப் போகிறதா அல்லது நீதிமன்றக் காவலில் வைக்கப்போகிறதா என இன்று தெரியவரும். ஒருவேளை நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரம் அனுப்பப்படும் பட்சத்தில் தில்லி திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான வகையில் ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது உதவினார் என்று சிபிஐ குற்றம்சாட்டுகிறது. சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, கடந்த 21-ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது, முதலில் 5 நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பின்னர் 30-ம் தேதிவரை சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே சிபிஐ தன்னை கைது செய்தது தவறு என்றும், கைது ஆணையை ரத்து செய்யக் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டி அமலாக்கப்பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி பானுமதி, போபண்ணா தலைமையிலான அமர்வில் கடந்த சில நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்கள், அதேபோல அமலாக்கப்பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
இருதரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில், அமலாக்கப்பிரிவு செப்டம்பர் 5-ம் தேதிவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதிகள் தடைவிதித்தனர். இந்த வழக்கில் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் ப.சிதம்பரத்துக்கான சிபிஐ காவல் இன்று(30-ம்தேதி) முடிகிறது. அவரை சிபிஐ அதிகாரிகள் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். ஆனால், ப.சிதம்பரம் தரப்பில், சிபிஐ காவலில் செப்டம்பர் 2-ம்(திங்கள்கிழமை) தேதிவரை இருந்து கொள்வதாக சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிபிஐ ப.சிதம்பரத்தை காவலில் மீண்டும் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அவர் சிபிஐ காவலுக்கு அனுப்பிவைக்கப்படுவார். ஒருவேளை சிபிஐ அதிகாரிகளும் காவலை நீட்டிக்க கோராத பட்சத்தில், நீதிமன்றம், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடலாம். அவ்வாறு நீதிமன்றக் காவலுக்கு ப.சிதம்பரம் மாற்றப்படும் பட்சத்தில் சிதம்பரம் திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்.