தேசத்தை 'நிதி எமர்ஜென்சிக்கு' மத்தியஅரசு தள்ளுகிறது: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா : கோப்புப்படம்
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,
நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மந்த நிலை நிலவுவதை மறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை வலுக்கட்டாயமாகப் பெற்று, தேசத்தை நிதி அவசர நிலைக்குள் மத்திய அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது

ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரிநிதியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி சார்பில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமால் ஜலான் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த பணம் மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளது.

இதில் திருத்தப்பட்ட பொருளாதார மூலதன செயல்வரைவின்படி 2018-19 நிதி ஆண்டுக்கான உபரி நிதியாக ரூ.1,23,414 கோடி யும், ரூ.52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்படு வதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வழங்கும் பணத்தை மத்திய அரசு வலுக்கட்டாயமாகப் பெறுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில் " பிரதமரும், நிதியமைச்சரும், தாங்கள் உருவாக்கிய பொருளாதார சீரழிவை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து திருடுவதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. துப்பாக்கிச்சூட்டு காயத்திற்கு மருந்தகத்தில் இருந்து பேண்டெய்டை திருடி போடுவது போல் உள்ளது இந்த செயல்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் மத்திய அரசைச் சாடி இன்று பதிவிட்டுள்ளார்.

அதில் " இடர்பாடுகளை சமாளிக்க வைத்திருந்த ரிசர்வ் வங்கியின் நிதி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. பாஜக அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து வலுக்கட்டாயமாக ரூ.1.76 லட்சம் கோடியை எடுத்துக்கொண்டுள்ளது.

மத்திய அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காகவும், மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை மறைக்கவும் இந்த பணத்தை எடுத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு தேசத்தை நிதி அவசரநிலைக்குத் தள்ளுகிறது.

மத்திய அரசின் புதிய இந்தியாவில் கொள்ளையடித்தலும், தப்பி ஓடுதலும்தான் இருக்கிறது மற்றொருபுறம் சாமானிய மக்களுக்கு வரி விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in