

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று கூறியதாவது:
முன்னாள் பிரதமர் தேவகவுடா வும், அவரது மகன் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் என் மீது கூறிவரும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை சரியாக நடத்த குமாரசாமிக்கு தெரியவில்லை. அதனால்தான் ஆட்சி கவிழ்ந்தது. இதை மறைக்க என் மீது தேவையற்ற குற்றச்சாட் டுக்களை கூறி வருகின்றனர்.
கர்நாடகாவில் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்எல்ஏக்களால் உருவானது. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மை இல்லாத நிலையில் சட்டத்துக்கு எதிராக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற் குள்ளாக அமைச்சர் பதவி கேட்டும், துணை முதல்வர் பதவி கேட்டும் மோதல் உருவாகி விட்டது. சில மூத்த தலைவர்களே பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ள னர். அதன்படி பார்த்தால், இந்த முறையும் எடியூரப்பாவால் முழு மையாக தனது பதவி காலத்தை நிறைவு செய்ய முடியாது.
எடியூரப்பாவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குவது அப்பட்டமாக தெரிகிறது. முதல்வ ராக இருந்தும் தன் விருப்பப்படி முடிவெடுக்க முடியாமல் எடியூரப்பா தவிக்கிறார். இதை யெல்லாம் கவனிக்கும்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு விரைவில் கவிழும் என்பது உறுதியாக தெரிகிறது. எனவே எந்த நேரத்திலும் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரலாம்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கும். இந்தப் போட்டியில் மஜத இடம்பெறாது. தனிப்பட்ட முறையில் மஜத மீதோ, அதன் தலைவர்கள் மீதோ எனக்கு எவ்வித வருத்தமும், கோபமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.