

மும்பை, பிடிஐ
மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பீமா-கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கொன்சால்வேஸ் என்ற சமூகச் செயல்பாட்டாளரின் வீட்டிலிருந்து கைப்பற்ற புத்தகத்தில் ‘போரும் அமைதியும்’ என்ற புத்தகம் இருந்தது, இது டால்ஸ்டாயின் நாவல் என்று தெரியாமல் நீதிபதி இன்னொரு நாட்டுப் போர் பற்றிய இந்தப் புத்தகத்தை நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கொன்சால்வேஸிடம் கேட்டதாக செய்திகள் வெளிவந்தன.
அதாவது, ‘ஆட்சேபணைக்குரிய போரும் அமைதியும் போன்ற புத்தகங்களை ஏன் வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
இது தொடர்பாக இன்று தொடர்ந்த வாதங்களில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபரின் வழக்கறிஞர், நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த போரும் அமைதியும் புத்தகம் பிஸ்வஜித் ராய் எழுதிய “War and Peace in Junglemahal: People, State and Maoists” என்ற நூல் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தப் புத்தகம் எதைப்பற்றியது என்று அதன் வெளியீட்டாளர்களின் வார்த்தைகளில் கூறினால், அரசாங்கங்களின் மேட்டுக்குடி வளர்ச்சி கொள்கைகளினாலும் நாடாளுமன்ற அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடுகளினாலும் மாவோயிஸ்ட்களின் மதியீனங்களினாலும் தோல்வியடைந்த அமைதி முயற்சிகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஆகும்.
ஆனால் நீதிபதி போரும் அமைதியும் பற்றி குறிப்பிட்டது ட்விட்டரில் பெரிய அளவில் எதிர்வினை கிளம்பியுள்ளது. #WarAndPeace என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது.
கொன்சால்வேஸ் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட புத்தகங்கள் எதுவும் அரசினால் தடை செய்யப்படவில்லை என்று கொன்சால்வேஸ் வழக்கறிஞர் கோர்ட்டில் எடுத்துக் கூறினார்.
இந்நிலையில் நீதிபதி கோட்வால் கூறும்போது, “போரும் அமைதியும் டால்ஸ்டாய் எழுதிய செவ்வியலக்கியம் என்பது எனக்குத் தெரியும். குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டதை நான் படித்துப் பார்த்தேன். அந்தக் கையெழுத்து மிக மோசமாக இருந்தது. எனக்கு போரும் அமைதியும் தெரியும். அங்கு நான் ஒரு கேள்வியை முன் வைத்தேன் அதற்காக அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களெல்லாம் குற்றமிழைக்கத் தூண்டுபவை என்று நான் சுட்டவில்லை.” என்றார்.
குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜின் வழக்கறிஞர் யுக் சவுத்ரி, கோர்ட் சுட்டிக்காட்டியது ராயின் புத்தகமே தவிர டால்ஸ்டாயின் புத்தகம் அல்ல என்றார்.