சிதம்பரம் வழக்கு: ஆதாரங்களை காண்பித்தால் மற்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு வாதம்

சிதம்பரம் வழக்கு: ஆதாரங்களை காண்பித்தால் மற்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு வாதம்
Updated on
1 min read

புதுடெல்லி
ப.சிதம்பரம் வழக்கு தொடர்பான ஆதாரங்களை காண்பித்தால் பொருளாதார குற்றம் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கிய மற்ற வழக்குகளின் விசாரணையில் சிக்கல் ஏற்படும் என உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்ட விதிகளை மீறி ரூ.305 கோடி அந்நிய முதலீட்டை திரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகிய இரு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம் பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதி மன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளுபடி செய்தது. அடுத்த நாள் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரது சிபிஐ காவல் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.பானுபதி, ஏ.எஸ்.போபன்னா அமர்வு விசாரித்து வருகிறது. இதில் சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளு படி செய்தனர்.

எனினும், அமலாக்கப் பிரிவு வழக்கில் சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் வாதிட்டனர். இதையடுத்து கைது செய்வதற்கான தடையை நீட்டித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் பிரிவு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தொடர்ந்து இன்றும் தனது வாதங்களை முன் வைத்தார்.

அவரது வாதத்தில் “சிதம்பரம் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. சிதம்பரம் மிகவும் திறமையானவர். மொகுல் சோஸ்கி, விஜய்மல்லையா, நீரவ் மோடி என பல பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன. அதுபோலவே தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்த வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை இன்னமும் முடிவடையவில்லை.

இந்தநிலையில் ப.சிதம்பரம் தரப்பு கோரியபடி ஆதாரங்களை காட்டினால் பொருளாதார குற்றம் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கிய மற்ற வழக்குகளின் விசாரணையில் சிக்கல் ஏற்படும். சிதம்பரம் வழக்கில் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவற்றை நீதிமன்றதத்தில் கூட சமர்பிக்க முடியாத அளவு மிகவும் முக்கியமான ஆதாரங்கள். இதுமட்டுமின்றி சிதம்பரம் தொடர்பான வழக்குகள் விசாரணை முழுமையடையவில்லை. அந்த வழக்கின் சாட்சியங்கள் இதனால் பாதிக்கப்படக்கூடும்’’ எனக் கூறினார். மேலும் இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பின் வாதம் ஏற்கத்தல்ல எனவும் துஷார் மேத்தா வாதிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in