

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து அதற்கு எதிராக நடந்த போராட்டங்களில், ராணுவம் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தியதில் 36 பேர் காயமடைந்ததாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370-வது பிரிவை திரும்பப் பெற்றது. மேலும் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இந்த மாநிலப் பிரிவு வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாடவும் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
தொலைபேசி, இணையம், செல்போன் சேவை, லேண்ட் லைன் சேவையும் ரத்து செய்யப்பட்டு, ஊடகத்தினருக்கு செய்தி சேகரிக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவம் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பலரின் கண் பார்வை பாதிப்புக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக், போராட்டத்தில் பெல்லட் குண்டு பயன்பட்டதை ஒப்புக்கொண்டார்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பெல்லட் குண்டு பயன்படுத்தியதில் ஸ்ரீ நகரில் மட்டும் 36 பேர் காயம் அடைந்துள்ளதாக மூத்த அதிகாரிகள் 'தி இந்து' (ஆங்கிலம்) விடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ யாருக்கும் கண்பார்வை பாதிக்கப்படவில்லை. 4 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் இடுப்புப் பகுதியில்தான் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காஷ்மீரின் மற்ற இடங்களில் இது டொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தளபதி புர்கா வானி ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகள் பயன்படுத்தியதில் 7,000க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தனர். இதில் 30 பேருக்கும் அதிகமானவர்களுக்குப் பார்வை பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.