

பாட்னா,
கடவுள்களுக்கெல்லாம் உயர்ந்தவரான மகாதேவ் (சிவன்) சமூகத்தில் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிந்த் சாதியைச் சேர்ந்தவர் என்று பிஹார் மாநில பாஜக அமைச்சர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
ஏற்கெனவே அனுமன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேசியிருந்த நிலையில் இப்போது பிஹார் பாஜக அமைச்சர் பிரிஜ் கிஷோர் பிந்த் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளன. அங்கு முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். மாநிலத்துக்குப் புதிய ஆளுநராக பாகு சவுகான் நியமிக்கப்பட்டு இருந்தார். அவருக்குப் பாராட்டு விழா பாட்னாவில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி, பாஜக அமைச்சர் பிரிஜ் கிஷோர் பிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர்.
இதில் பிரிஜ் கிஷோர் பிந்த் பேசுகையில், "கடவுள்களில் உயர்ந்தவரான மகாதேவ் (சிவன்) சமூகத்தில் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிந்த் சாதியைச் சேர்ந்தவர்" என்று பேசினார். இவரின் பேச்சால் மேடையில் அமர்ந்திருந்த ஆளுநர், துணை முதல்வர்கள், பாஜக தலைவர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாகினர்.
நிகழ்ச்சி முடிந்தபின் பிரிஜ் கிஷோரிடம் நிருபர்கள் சென்று, கடவுள் சிவன் தொடர்பாக பேசியதை கேள்வி எழுப்பினர். அதற்கு கிஷோர் கூறுகையில், " நான் சிவ புராணத்தில் என்ன குறிப்பிட்டுள்ளதோ அதைத்தான் கூறினேன். அதில் கடவுள் சிவன் பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நூலையும் வரலாற்று அறிஞர் வித்யாதர் மகாஜன் எழுதியுள்ளார்.
கடவுள் சிவன் பிற்படுத்தப்பட்ட சமூகமான பிந்த் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறியதால், மக்களுக்கு என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது. கடவுள் ராமர் சத்ரியகுலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள், கடவுள் கிருஷ்ணர் யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள் அப்படி இருக்கும்போது, சிவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாதா" என்றார்.
பிடிஐ