

பிஹார் மேலவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பதும் மெகா கோடீஸ்வரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பிஹார் மேலவையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு ஜூலை 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 170 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 74 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவர். அதில் 41 பேர் மீது கொலை, கொலைமுயற்சி, கடத்தல், கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட கொடிய வழக்குகள் உள்ளன.
கட்சிகளின் அடிப்படையில் கணக்கிட்டால் பாஜக முதலிடத்தில் உள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் 18 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 10 பேர் மீது வழக்குகள் உள்ளன.
அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. அந்தக் கட்சியின் 10 வேட்பாளர் களில் 6 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவர். ராஷ்டிரிய ஜனதா தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. அந்தக் கட்சியின் 10 வேட்பாளர்களில் 3 பேர் மீது வழக்குகள் உள்ளன. தேர்தல் களத்தில் மொத்தம் 104 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் 32 சதவீதம் பேர் மீது வழக்குகள் உள்ளன.
மெகா கோடீஸ்வரர்கள்
இதேபோல மொத்த வேட்பாளர்களில் 77 பேர் மெகா கோடீஸ்வரர்கள் ஆவர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5.28 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன.
இதில் பாஜக வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தோராயமாக தலா ரூ.29.33 கோடி சொத்துகள் உள்ளன. மிக அதிகபட்சமாக பாஜக வேட்பாளர் சச்சிதானந்த ராய்க்கு ரூ.407 கோடி சொத்துகள் உள்ளன.
ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களுக்கு சராசரியாக ரூ.14.27 கோடி அளவுக்கும் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர்களுக்கு தலா ரூ.5 கோடி அளவுக்கும் சொத்துகள் உள்ளன. கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 170 வேட்பாளர்களில் 80 பேர் மட்டுமே பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.
பிஹார் தேர்தல் கண்காணிப்பகம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.