

புதுடெல்லி,
அமைச்சகங்களில் ஆலோசனைகள் கூறும் இடத்தில் உறவினர்கள், நெருங்கியவர்களைப் பணியமர்த்தக் கூடாது என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
''அமைச்சகங்களில் ஆலோசனைகள் வழங்கும் பணியிடங்களில் அமைச்சர்கள் தங்கள் உறவினர்களையும், நெருக்கமானவர்களையும் பணியில் அமர்த்தக் கூடாது என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல் ஊடகங்களிலும், பொதுவெளியிலும் அமைச்சர்கள் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். உண்மைகளையும், நேர்மையான புள்ளிவிவரங்களை மட்டுமே குறிப்பிட்டுப் பேச வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சர்களுக்கும், இணையமைச்சர்களுக்கும் இடையே சிறந்த கூட்டுறவு இருத்தல் வேண்டும். இந்த கூட்டுறவு மூலம் நிர்வாகத்தை வேகமாகவும், திறமையாகவும் கொண்டு செல்ல முடியும்.
அமைச்சகங்களில் பணியாற்றும் செயலர்கள் நிலையிலான உயரதிகாரிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தாமல், கூடுதல் செயலர்கள், இயக்குநர்கள், இணைச் செயலர்கள் நிலையிலான அதிகாரிகளுடனும் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்களும் அமைச்சகப் பணிகளில் தங்களின் பங்கு இருக்கிறது என்று உணர்வார்கள். அதுமட்டுமல்லாமல் அதிகாரிகளை ஊக்கப்படுத்தும்போது அவர்கள் இன்னும் உற்சாகமாகவும், ஊக்கமாகவும் பணிபுரிவார்கள்.
அனைத்து அமைச்சர்களும் காலை 9.30 மணிக்கே அலுவலகப் பணிக்கு வந்துவிட வேண்டும். என்னுடைய அறிவுரை மற்றும் ஆலோசனைக்காக காத்திருக்காமல் பணியைத் தொடங்கிவிட வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்
பிரதமர் மோடி எப்போதும் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றில் அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கும் பழக்கம் உடையவர். தன்னுடைய அமைச்சகங்களில் இருக்கும் அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும், பணியில் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்று பல நேரங்களில் மோடி வலியுறுத்தி வருகிறார். இந்த வழிமுறைகளை மூத்த அமைச்சர்கள் பின்பற்றும்போது, நிர்வாகம், உற்பத்தி, அனைத்திலும் நேர்முறையான வளர்ச்சிக்குரிய தாக்கம் இருக்கும் என்று பிரதமர் மோடி நம்புகிறார்.
பிடிஐ