

புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்காலே குடாஷெவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 4, 5 ஆகிய தேதிகளில் ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் பயணம் செய்கிறார். இங்கு நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையடுத்து இந்தியா ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு அதிபர் புதினுடன் பேச்சு நடத்துகிறார்.
இந்தியா ரஷ்யா இடையே ஏற்கெனவே நெருங்கிய நட்புறவு இருந்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு, வர்த்தகம், அணு மின்சக்தி, ஹைட்ரோகார்பன் உள் ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பும் ஆர்வமாக இருப்பதால் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் புதிய அத்தியாயம் படைக்கும் என நம்புகிறோம். இரு நாடுகளுக் கும் பரஸ்பரம் பலன் அளிக்கும் விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த மோடி புதின் சந்திப் பில் அடித்தளம் இடப்படும். இவ்வாறு இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறும் போது, “இந்தியாவில் கூடங்குளம் அணுமின் திட்டத்தின் கீழ் 6 அணு உலைகள் வரை ரஷ்யா அமைக்கும். கூடங்குளம் தவிர மேலும் 6 அணு உலைகள் அமைப் பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்” என்றார். - பிடிஐ