Published : 28 Aug 2019 06:42 PM
Last Updated : 28 Aug 2019 06:42 PM

பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா?; செல்போன், இன்டர்நெட் சேவையை ஏன் தடைசெய்தோம்?: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் விளக்கம்

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மக்களின் அடையாளம், கலாச்சாரம் ஆகியவை காக்கப்படும், அதேசமயம், உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அங்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்று மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் இன்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மேலும் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இந்த மாநிலப் பிரிவு உத்தரவு வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மாநிலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாடவும் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

தொலைப்பேசி, இன்டர்நெட், செல்போன் சேவை, லேண்ட்லைன் சேவையும் ரத்து செய்யப்பட்டு, ஊடகத்தினருக்கு செய்தி சேகரிக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு வராமல் கடைகளுக்கு செல்வதை தவிர்த்தனர்.

பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்ட போதிலும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கி வருகின்றனர்.

இந்த சூழலில் ஆளுநர் சத்ய பால் மாலிக் இன்று ஸ்ரீநகரில் பேட்டி அளித்தார். காஷ்மீரில் 370 பிரிவை திரும்பப் பெற்றபின் ஆளுநர் முதல் முறையாகப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், " மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவையை நம்மைக் காட்டிலும் தீவிரவாதிகள்தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்யவும், இடம்விட்டு இடம் நகரவும் இந்த சேவை முக்கியமானதாக இருக்கிறது. பாகிஸ்தான்கூட இதை ஆயுதமாக பயன்படுத்துகிறது.

அதைத் தடுக்கவே நாங்கள் இன்டர்நெட், செல்போன் சேவையை முடக்கி இருக்கிறோம். உடனடியாக இயல்புநிலைக்கு வராது, படிப்படியாகத்தான் இதன் சேவை மீண்டும் இயக்கப்படும்.

இப்போது எங்களின் நோக்கம் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதுதான். அதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கலாச்சாரம், அடையாளம் காக்கப்படும் என்பதற்கு உறுதியளிக்கிறேன்.

கலவரக்காரர்களுக்கு எதிராக பெல்லட் குண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தினோம்.ஆனால், போராட்டக்காரர்களின் இடுப்புக்கு கீழ்தான் போலீஸார் சுட்டார்கள். ஒருவருக்கு மட்டுமே கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவரும் நலமாக இருக்கிறார்

அடுத்த 3 மாதங்களில் காஷ்மீர் மாநிலத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு விரைவில் மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறது.

காவலில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து வருத்தம் கொள்ள வேண்டாம். அது அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு உதவும் " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x