சோனியா காந்தி, ராகுல் பதவி விலக விருப்பம்: காங்கிரஸ் செயற்குழு நிராகரிப்பு

சோனியா காந்தி, ராகுல் பதவி விலக விருப்பம்: காங்கிரஸ் செயற்குழு நிராகரிப்பு
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தனர். அதை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக நிராகரித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள் கிழமை நடந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோனி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேர்தல் தோல்வி குறித்து தலை வர்கள் ஆலோசனை நடத்திய போது, காங்கிரஸின் பிரச்சார வியூகத்தை பெரும்பாலான தலை வர்கள் குறைகூறினர். தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிக் கொள்வதாக சோனியாவும், ராகுல் காந்தியும் அறிவித்தனர்.

மன்மோகன் சிங் ஆதரவு

இதற்கு கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்மோகன் சிங் பேசியபோது, “சோனியா, ராகுல் பதவி விலகுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. தவறுகளைத் திருத்த வேண்டும். அரசு அதிகாரத்தைப் பொறுத்தமட்டில், தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். சோனியாவும், ராகுலும் முன்னின்று கட்சியை வழிநடத்த வேண்டும்” என்றார்.

அவரது கருத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதால் சோனியா, ராகுல் தலைமை மீது முழு நம்பிக்கை வைப்பதாகவும் கட்சியை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முழு அதிகாரம் அளித்து கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது காங்கிரஸுக்கு சவாலான பணியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

இந்த சவாலை எதற்கும் பொறுப்பை ராகுலிடம் ஒப்படைப்பது சரியல்ல. கமல்நாத், மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி போன்ற மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. கமல்நாத் ஒன்பதாவது முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்காக துவண்டுவிடாமல் வரவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வியூகம் வகுக்க வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த தேர்தலில் வாக்குகள் பிரிந்துள்ள விதம் ஆபத்தானது என்று சோனியா எச்சரித்ததாகவும் மக்களின் தீர்ப்பை பூர்த்தி செய்யா ததற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரி வித்ததாகவும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தெரிவித்தனர்.

களையிழந்த சோனியா

கூட்டத்தில் பங்கேற்ற சோனியா வழக்கத்துக்கு மாறாக களையிழந்த முகத்துடன் இருந்தார். அவரது முகம் வீக்கத்துடன் காணப்பட்டது.செயற்குழுக் கூட்டத்தின்போது இளைஞர் காங்கிரஸார் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in