காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவி; ராகுல்  மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

ராகுல் காந்தி : கோப்புப்படம்
ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வில் இந்தியாவை இலக்காக பாகிஸ்தான் வைப்பதற்கு ராகுல் காந்தி உதவிவிட்டார், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மேலும் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இந்த மாநிலப் பிரிவு உத்தரவு வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆனால், இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. இந்தியாவுடனான வர்த்தகம், ரயில், பஸ்போக்குவரத்தை ரத்து செய்தது, அடுத்ததாக வான்வழியையும் மூடுவதற்கு ஆலோசித்து வருகிறது.

காஷ்மீருக்கு கடந்த வாரம் செல்ல முயன்ற ராகுல் காந்தி, உள்பட 11 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மாநில நிர்வாகம் அனுமதி மறுத்தது. அப்போது பேட்டி அளித்த ராகுல் காந்தி, " கொடூரமான நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. அடக்குமுறை சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காஷ்மீர் நடக்கும் கலவரத்தால் மக்கள் கொல்லப்படுகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐ.நா.வில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் கடிதம் அளித்துள்ளது. அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறிய வார்த்தைகளை குறிப்பிட்டு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அதில், " காஷ்மீரில் வன்முறைகள் நடக்கின்றன என்பதை இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தவறான சம்பவங்களால் அங்கு மக்கள் மடிந்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்" என்று பாகிஸ்தான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் செயலைப் பார்த்த ராகுல் காந்தி இன்று தன்னுடைய கருத்தை மாற்றி, ட்விட்டரில் பதிவிட்டார். அதில் " காஷ்மீர் எங்களின் உள்நாட்டுப் பிரச்சினை அதில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது" என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்த இரட்டை நிலைப்போக்கை பாஜக கடுமையாகக் கண்டித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரின் கருத்துக்கள் நாட்டை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டவை. ஐ.நா.வில் இந்தியாவை பாகிஸ்தான் இலக்காக வைக்க அவர் பாகிஸ்தானுக்கு உதவிவிட்டார்.

காஷ்மீரில் வன்முறை நடக்கிறது என்றும், மக்கள் செத்து வருகிறார்கள் என்றும் பேசிய ராகுல் காந்தியும், அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்புக் கோர வேண்டும். இது மிகமோசமான பொறுப்பற்ற அரசியல் என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள்.

காஷ்மீர் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த ராகுல் காந்தி, அரசியல் சூழல் காரணமாகவும், மக்களின் அழுத்தம் காரணமாகவும், திடீரென தான் பேசியதில் இருந்து முழுமையாக , மாற்றிப் பேசியுள்ளார்.

காஷ்மீரில் வன்முறை நடக்கிறது என்று கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தவறானவை. தேர்தலில் வாக்கு வங்கி அரசியலுக்காகவே அந்த கட்சி இவ்வாறு நடக்கிறது. இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in