

மும்பை
மகாராஷ்டிரா கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக வெள்ளநிவாரணத்திற்கு நிதி வழங்குங்கள் எனவும் மகாராஷ்டிரா காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் பெய்த கனமழையினால் மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கொங்கண் மண்டலம் பகுதிகளில் பெருமளவில் வெள்ளப் பாதிப்புகள். ஏற்பட்டன. இதனால் கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்கள் பேரிழப்புகளை சந்தித்தன. சமீபத்திய வெள்ளப் பாதிப்புகளினால் மேற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் மட்டும் 58 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி வரும் 2ஆம் தேதி தொடங்கி 10 நாள் உற்சவமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்தாவது:
காவல்துறை பணியாளர்கள் சென்ற ஆண்டைப் போலவே இந்தஆண்டும் இந்தத் திருவிழாக்களை சீராக ஒழுங்கு அமைப்பார்கள் என்று உறுதியளிக்கப்படுகிறது.
சமீபத்திய கன மழை ஏற்படுத்திய பெரும் பாதிப்புகளில் மாநில அளவில் மற்ற இடங்களை ஒப்பிடும்போது சாங்லி, கோலாப்பூர் மாவட்டங்கள் பேரிழப்புகளை சந்தித்துள்ளன.
இதிலிருந்து அவர்கள் மீண்டுவர நிறைய உதவி தேவைப்படுகிறது. அதனால் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கான செலவுகளை குறைத்துக் கொண்டு ஆடம்பரமில்லாமல் எளிய திருவிழாவாகக் கொண்டாடுவதோடு, அந்த நிதியை வெள்ள நிவாரணப் உதவி பணிகளுக்கு அளிக்க முன்வர வேண்டும்'' எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.