

டெல்லி
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டத்தை நடிகர் ஆமிர்கான் ஆதரித்து கருத்து தெரிவித்ததற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேசி வருகிறார். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஆற்றிய உரையில், நாட்டை பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவாக மாற்றுவதற்கான நாளாக வரும் அக்டோபர் 2-ம் தேதியை கடைபிடிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசும்போது, “இந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நாம் கொண்டாடும்போது, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை நாம் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான புதிய புரட்சிக்கு நாம் அடித்தளம் இடவேண்டும். இதில் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் தாங்களாவே தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக குரல் எழுப்பி வரும் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தனது ட்விட்டர் பதிவில், “ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் பிரதமர் நரேந்திய மோடியின் திட்டம், நாம் அனைவரும் தீவிரமாக ஆதரிக்க வேண்டிய முயற்சி ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆமிர்கானின் இந்த ட்வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
‘‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி ஆமிர்கான். உங்களுடைய ஊக்கமளிக்கம் வார்த்தைகள் இந்த திட்டத்தை வலுப்படுத்த மற்றவர்களுக்கும் ஊக்குவிக்கும் விதமாக அமையும்’’
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.