Published : 28 Aug 2019 12:16 PM
Last Updated : 28 Aug 2019 12:16 PM

சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி


புதுடெல்லி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

மாநிலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பாதுகாப்பு கெடுபிடிகளை காஷ்மீர் நிர்வாகம் ஏற்படுத்தியது. தற்போது காஷ்மீரில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருவதால், பாதுகாப்பு கெடுபிடிகளை போலீஸார் தளர்த்தி வருகின்றனர்.

இந்தநிலையில், காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகாமியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவரை பார்க்க தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்திருந்தார்.

இதுபோலவே காஷ்மீர் மாணவர் முகமது அலிம் சயீத் அனந்தநாக்கில் வசிக்கும் தனது பெற்றோரை சந்திக்க அனுமதி வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சீதாராம் யெச்சூரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தாரிகாமியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஷ்மீரில் தற்போது அமைதி திரும்பி வருகிறது, சீதாராம் யெச்சூரியின் அரசியல் பயணத்தால் அங்கு அமைதி சீர்குலையும் எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில் ‘‘நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் சென்று நண்பர்களை, உறவினர்களை சந்திக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சீதாராம் யெச்சூரி தாராளமாக சென்று தனது நண்பரை பார்க்கலாம். வந்த பிறகு நண்பரின் நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கலாம்.

ஆனால் அவரது பயணம் தனிப்பட்ட பயணமாக தான் இருக்க வேண்டும். அரசியல் நிகழ்வு எதிலும் அவர் பங்கேற்க கூடாது. தனது பயணத்தின்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒருபோதும் அவர் மீறக்கூடாது. அதுபோலவே காஷ்மீர் மாணவரும் தனிப்பட்ட முறையில் தனது பெற்றோரை சென்று சந்திக்க எந்த தடையும் இல்லை. அவரும் வந்து அறிக்கையை தாக்கல் செய்யலாம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x