

பாட்னா
கூட்டுப் பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளான சிறுமி குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் மொட்டை அடித்து ஊர்வலம் செல்ல கிராம பஞ்சாய்த்து கொடுமையான தண்டனை விதித்த சம்பவம் பிஹாரில் நேற்று நடந்துள்ளது.
இதுகுறித்து பாட்னா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் 14 அன்று 15 வயது சிறுமியை அவரது ஊரில் உள்ளவர்களே கடத்திக்கொண்டுபோய் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி, இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் விவரித்ததை அடுத்து பெற்றோர்கள் இரண்டு நாட்கள் கடந்த பிறகு நீதி கேட்டு கிராம சபை பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் முறையிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டிய நபர்கள் தவறு செய்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில் உள்ளது. மேலும், கண்டுபிடிக்கமுடியாத குற்றச்சாட்டை அவராகவே கற்பனையாகக் கூறியுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி அதன்மூலம் ஆதாயம் தேடப் பார்ப்பதாகவும் கூறி அந்தப் பெண் மீது குற்றம்சாட்டிய பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொட்டை அடித்து கிராமத் தெருக்களில் ஊர்வலமாக செல்லவும் தண்டனை விதித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தின் இந்த கொடுமையான தீர்ப்புகுறித்து ஒரு வாரம் கடந்தபிறகு தொலைபேசியில் காவல்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (திங்கள்) பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அப் பெண்ணின் பெற்றோர் ஆகியோர் புகார் அறிக்கை ஒன்றை மோகன்பூர் காவல்நிலைய அதிகாரிகளிடம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து 5 பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலில் 14 நாள் சிறைவைக்ககப்பட்டுள்ளதாக கயா மஹிளா தானா மகளிர் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ரவி ரஞ்சனா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள சிறுமி தனக்கு ஏற்பட்ட சம்பவங்களிலிருந்தும் உடல்ரீதியாகவும்
மீண்டுவரவில்லை. அதன் பிறகுதான் அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் மாநில மகளிர் ஆணையம் இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக இத்தனை தவறான தீர்ப்பை வழங்கிய கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஐந்துபேரும் எங்கள் ஆணையத்திற்கு முன்பு ஆஜராகி இத்தகைய மோசமான தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.