Published : 28 Aug 2019 10:23 AM
Last Updated : 28 Aug 2019 10:23 AM

370-வது பிரிவு திருத்தத்துக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
மாநிலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பாதுகாப்பு கெடுபிடிகளை காஷ்மீர் நிர்வாகம் ஏற்படுத்தியது. தற்போது காஷ்மீரில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருவதால், பாதுகாப்பு கெடுபிடிகளை போலீஸார் தளர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியலமைப்பு பிரிவு 370 பிரிவு வழங்கி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
தேசிய மாநாட்டுக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்எல். சர்மா, ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைஸல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஷீலா ரஷித் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் காஷ்மீ்ர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், ஊடகத்தினர் ,பத்திரிகையாளர்கள் தங்களின் கடமையை தடையின்றி செய்வதற்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி காஷ்மீர் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகாமியை நேரில்ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்திருந்தார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்த அனைத்து மனுக்களும் ஒன்றாகச் சேர்த்து ஒரே மனுவாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x