

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் நடைபெறும் கலவரங்களுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையில் அவரின் இந்த ட்வீட் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசுடன் எனக்கு பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு இருக்கிறது. ஆனால் நான் ஒரு விஷயத்தை மிக மிக தெளிவாக உணர்த்த விரும்புகிறேன். காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த ஒரு நாடோ தலையிட அனுமதி இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றுமொரு ட்வீட்டில், "ஜம்மு - காஷ்மீரில் வன்முறை இல்லை. அங்கு நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் எல்லாமே பாகிஸ்தானால் தூண்டப்பட்டுப்பட்டு ஆதரிக்கப்படுகிறது. உலகம் முழுவதுமே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் நடந்த தீவிரவாத தாக்குதலில் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் நேற்று தெரிவித்தனர்.
இந்நிலையில், காஷ்மீரில் நடைபெறும் கலவரங்களுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு முன்னாள் முதல்வர்கள் இருவர் உட்பட அரசியல் தலைவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் இன்றுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், இதனை அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்துவருகிறார்.
இதற்கிடையில், காஷ்மீர் நிலவரத்தை நேரில் பார்க்கச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்துடனேயே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில்தான் தீவிரவாத தாக்குதலில் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதாக நேற்று பாதுகாப்புப் படை அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.