காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் முதல்முறையாக  தீவிரவாதிகள் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் பலி

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் நடந்த தீவிரவாத தாக்குதலில் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள டிரால் லாச்சி பகுதியில் இருந்து துப்பாக்கிக் குண்டு காயத்துடன் காஷ்மீரைச் சேர்ந்த இருவரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கடந்தவாரம் மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பு 370 பிரிவு திரும்பப் பெறப்பட்டபின் நடந்த முதல் தீவிரவாதத் தாக்குதல் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டுபட்டு இறந்தவர்கள் காஷ்மீர் பகுதியில் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதிர் கோலி, அவரின் உறவினர் மன்சூர் அகமது கோலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில் புல்வாமா மாவட்டம் ட்ரால் பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த மலைப்பகுதியில் ஜெய்ஷ் முகமது தீவிரவாதிகளால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியப்பின், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்கும் வகையில், மாநில நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்துள்ளது. கடந்த 20 நாட்களுக்கும்மேலாக அங்கு பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவுவதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வரமுடியாமல் இருக்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி காஷ்மீரின் வடக்குப்பகுதியில் இருக்கும் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவரும், சிறப்பு போலீஸ் படை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in