

புதுடெல்லி
2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரிசர்வ் வங்கி ஈட்டிவரும் லாபத்தில் 99 சதவீதத்தை கையகப்படுத்தி விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது அறிக்கையைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வாரியக் குழுவிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், நேற்று இது தொடர்பான விவாதத்தில் ரிசர்வ் வங்கி வாரியக்குழு ஈடுபட்டது.
பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின்படி மத்திய அரசுக்கு முதல்கட்ட உபரி நிதியை இந்த நிதி ஆண்டில் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் திருத்தப்பட்ட பொருளாதார மூலதன செயல்வரைவின்படி 2018-19 நிதி ஆண்டுக்கான உபரி நிதியாக ரூ.1,23,414 கோடி யும், ரூ.52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்படு வதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘கடந்த 2014-ம் ஆண்டு முதல் மோடி அரசு ரிசர்வ் வங்கி ஈட்டிவரும் லாபத்தில் 99 சதவீதத்தை கையகப்படுத்தி விட்டது. தற்போது வங்கியின் உபரிநிதி 1.76 கோடி ரூபாயையும் வாங்கிக் கொள்கிறது.
இந்த பணத்தை மோடியின் பெருமுதலாளிகள் சூறையாடியதால் நலிந்து போன பொதுத்றை வங்கிகளுக்கு மறு மூலதனமாக வழங்க உள்ளனர். நாட்டின் மிகச்சிறந்த நவரத்தினங்களாக திகழ்ந்த பொதுத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது அரசு சுமத்திய நிதிச் சுமை மற்றும் ஈவுத்தொகையை பெற்றது என இரண்டை தாக்குதலால் அவை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு நிறுவனங்கள், பெண் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசின் செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன’’ எனக் கூறியுள்ளார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.