

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக தொடர்ந்த வழக்கில், அமலாக்கப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கக்கோரும் வழக்கில் சிதம்பரம் தரப்பு பரபரப்பான வாதத்தை முன் வைத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ அமைப்பால் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 4 நாட்கள் சிபிஐ காவலில் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவு தனியாக ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இன்றுவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், அமலாக்கப்பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக ப.சிதம்பரத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, 2019 ஜனவரி 1-ம் தேதி, ஜனவரி 21-ம் தேதிகளில் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியுள்ளது.
இந்த விசாரணையின் போது ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளின் நகல்களை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டு ப.சிதம்பரத்திடம் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
அப்போது, கபில் சிபல் வாதிடுகையில், " ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த நகல்களை அமலாக்கப்பிரிவு முறையாகத் தாக்கல் செய்து எங்களுக்கு வேண்டும். வழக்கில் பொதுவான ஆவணங்களைத் தாக்கல் செய்துவிட்டு காவலில் எடுக்க வேண்டும் என்று கோர முடியாது.
விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விக்கான நகல்களை தாக்கல் செய்தால்தான், விசாரணையின் போது ப.சிதம்பரம் விவரங்களை மறைத்தாரா? விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தாரா? என்பது குறித்து தெரிய வரும்" என்று தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில் " அரசியலமைப்புச்சட்டம் மற்றும் சட்டவிதிகள் படி, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியாது. சட்டவிரோத பணப்பரிமாற்றச்சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ப.சிதம்பரம் மீது 2007-08-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவர், சூத்திரதாரி என்று ஒருவர் மீது வண்ணம் பூச முயற்சிக்கிறீர்கள். ஆனால், அமலாக்கப்பிரிவு சார்பில் கூறப்படும் குற்றம் அந்த நேரத்தில் நடக்கவில்லை " என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று பிற்பகலுக்குபின் மீண்டும் வாதம் நடக்கும், அதன்பின் உத்தரவுகளை நீதிபதி பிறப்பிப்பார் எனத் தெரிகிறது.
பிடிஐ