

புதுடெல்லி
மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி ரூ.354 கோடி வங்கி மோசடி செய்த புகாரில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.1,400 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதை அமலாக்கப்பிரிவு கண்டுபிடித்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி. மோசர் பேர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் ரதுல் பூரி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தீபக் பூர், மற்றொரு இயக்குநர் நீட்டா பூரி அவரின் மகன் ரதுல் பூரி ஆகியோரும் இயக்குநர் குழுவில் உள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரும் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். போலியான ஆவணங்கள் மூலம் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சிடி, டிவிடி போன்றவற்றைத் தயாரிக்கும் மோசர் பேயர் நிறுவனம் கடன் காரணமாக நலிவுற்று மூடப்பட்டது.
நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்தபோது ரூ.345 கோடி முறைகேடாக செலவு செய்யப்பட்டு, மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் இந்த மாதம் முதல்வாரத்தில் ரதுல் பூரி, இயக்குநர் குழுவில் உள்ள அனைவரின் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20-ம் தேதி ரதுல் பூரியை சிபிஐ கைது செய்தது. அமலாக்கப்பிரிவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் அமலாக்கப் பிரிவு ரதுல் பூரியை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அமலாக்கப்பிரிவினர் ரதுல் பூரியை காவலில் எடுத்து விசாரித்தபோது, வங்கி அளித்த புகாரில் கூறப்பட்ட தொகையைக் காட்டிலும் கூடுதலாக, ரூ.1400 கோடிக்கு ரதுல் பூரி மோசடி செய்துள்ளதை அமலாக்கப்பிரிவினர் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு துறை வட்டாரங்கள் கூறுகையில், " ரதுல் பூரி நடத்தி வந்த மோசர் பேர் நிறுவனம் ஜெர்மனியில் உள்ள சிங்குலஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் இருந்து ப்ளூரே ட்ஸ்குகளை விலைக்கு வாங்கி வந்தது. ஏறக்குறைய 33 லட்சம் டாலர்களுக்கு இந்த டிஸ்குகளை வாங்கியது. ஆனால், விலை நிர்ணயிக்கப்பட்டதற்கும், வாங்கப்படதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருந்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் இருமடங்கு விலை தரப்பட்டுள்ளது.
விசாரணையில் டிஸ்க்கின் விலையை இருமடங்கு வைத்து கொள்முதல் செய்து, அதில் கிடைத்த பணத்தை தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி அதில் ரதுல் பூரி டெபாசிட் செய்துள்ளார். இதேபோன்று சக்ஸேனா என்பவரிடம் இருந்து சோலார் பவர் பேனல்களையும் வாங்கி ரதுல் பூரி விற்பனை செய்துள்ளார். இதற்காகவும் வங்கியில் கடன் பெற்றுள்ளார்.
இதில் கிடைத்த லாபத்தையும் தனது வங்கிக் கணக்கிற்கு ரதுல் பூரி மாற்றிக்கொண்டு, தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்குக் காட்டியுள்ளார். இந்த வகையில் மட்டும் ரூ.1,492.36 கோடிக்கு ஒட்டுமொத்தமாக ரதுல் பூரி வியாபாரம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ரதுல் பூரியுடன் சேர்ந்து 25 பேருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கின்றன.
ஐஏஎன்எஸ்