Published : 27 Aug 2019 12:50 PM
Last Updated : 27 Aug 2019 12:50 PM

மக்கள் மருந்தகங்களில் இனி ரூ.1-க்கு சேனிட்டரி பேட் வாங்கலாம்

புதுடெல்லி,

மக்கள் மருந்தகங்களில் இனி ரூ.1-க்கு சேனிட்டரி பேட் வாங்கலாம். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்களில் (ஜன் அவுஷாதி கேந்திரங்கள்) சுவிதா என்ற பெயரில் சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 4 நாப்கின்கள் கொண்ட பாக்கெட் இதுவரை ரூ.10-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆக.27) முதல் 4 சேனிட்டரி பேட் கொண்ட பாக்கெட்டின் விலை ரூ.4-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின்களுக்கான விலையை 60 சதவீதம் வரை குறைத்ததன் மூலம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக உரம் மற்றும் ரசாயனத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "ஆக்ஸோ - பயோடீக்ரேடபிள் சேனிட்டரி பேட் பாக்கெட்டுகளை ஆக.27-ம் தேதி முதல் ரூ.4-க்கு விற்பனை செய்யவுள்ளோம். நாடு முழுவதும் உள்ள 5000 ஜன் அவுஷாதி கேந்திரங்களில் (மக்கள் மருந்தகங்கள்) இவை கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி உற்பத்தியாளர்கள் உற்பத்தி விலைக்கே எங்களுக்கு சேனிட்டரி நேப்கின்களை வழங்குகின்றனர், அதனால் சில்லறை விற்பனை விலையைக் குறைக்கும் வகையில் நாங்கள் மானியம் வழங்குகின்றோம்.

கடந்த 2018 மே மாதம் முதல் இந்த சேனிட்டரி பேட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 2.2 கோடி பேட்கள் விற்பனையாகியுள்ளன. இப்போது விலை குறைக்கப்பட்டுள்ளது விற்பனை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

சராசரியாக மற்ற பிராண்ட் சேனிட்டரி பேக்குகளைப் பொறுத்த வரையில் ஒரு பேட் விலை ரூபாய் 6 முதல் 8 வரை இருக்கும் நிலையில் இந்த விலை குறைப்பு பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

2015-16-ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி, 15 வயது முதல் 24 வயது வரையுள்ள 58 சதவீத பெண்கள் உள்ளூர் தயாரிப்பு சேனிட்டரி நேப்கின்களையே பயன்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x