ஜூலை 30-ல் யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்?

ஜூலை 30-ல் யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்?
Updated on
1 min read

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமனுக்கு வரும் 30-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அதிகார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாகூப் மேமன் தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே சிறையில் அவருக்கு தூக்கு நிறைவேற்றப்பட உள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியதால் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. யாகூப் மேமனின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார். இதையடுத்து, தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிரான மனுவை கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் அவருக்கு வரும் 30-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in